லக்னோ: பல மாநிலங்களில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இப்போது, உத்தரப்பிரதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கின்றன.

இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்துள்ளன. அவை உணவுப் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

ராஜஸ்தானில் பல மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் பெருந்திரளாக காணப்பட்டன. இப்போது அந்த வெட்டுக்கிளிகள் அரியானாவின் குர்கான் பகுதியில் நுழைந்துள்ளன. படிப்படியாக அந்த வெட்டுக்கிளிகள் உத்தரப்பிரதேசம் நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெட்டுக்கிளிகள் பரிதாபாத்தில் நுழைந்தன. நிலைமையை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.பயிர்களைப் பொறுத்தவரை, குர்கான் மாவட்டத்தில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை. ஏனெனில் இவை மேலே பறக்கின்றன, இன்னும் வயல்களில் இறங்கவில்லை என்று பரிதாபாத் துணை ஆணையர் யஷ்பால் யாதவ் கூறினார்.

அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும். வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால் ஒன்றுகூடி தகர கேன்கள், தட்டுகள் மற்றும் டிரம்ஸில் அடிப்பதன் மூலம் உரத்த சத்தம் எழுப்பவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று குர்கான் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.