30 வருடங்களாகப் பெண்.. மருத்துவ பரிசோதனையில் ஆண்..
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்குத் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த அவர் மருத்து சிகிச்சைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது, அவர் ஒரு ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
தோற்றத்தில் அவர் பெண் போல் இருந்தாலும், மரபணு ரீதியாகவும், மருத்துவ விதிகளின்படியும் இவர் ஒரு ஆண். ஆண்களுக்கு ஏற்படும் டெஸ்டிகுலார் புற்றுநோய் அவருக்கு ஏற்பட்டுள்ளதால் வயிற்று வலி வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது 28 வயது சகோதரிக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், அவரும் இது போன்ற பண்புகளை உடையவர் எனத் தெரியவந்துள்ளது.
குரல், மார்பகங்கள், பிறப்புறுப்பு என வெளிப்புறத் தோற்றத்தில் அவர் முழுவதுமாக ஒரு பெண்ணாகவே காணப்படுகிறார். ஆனால் மரபணு ரீதியாகவும், உள்ளுறுப்புகளாலும் அவர் ஒரு பெண் இல்லை. அவருக்குக் கருப்பைகள் கிடையாது. இதுவரை மாதவிடாய் வந்ததில்லை. அவரது உடலுக்குள் விந்தணுக்கள் காணப்படுகின்றன. ஆண்களைப் போல XY குரோமோசோம்களே உள்ளது. ஆனால் வெளிப்புறத்தில் பெண்ணின் உடல் தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய ஹார்மோன்களும் இவர் உடலில் சுரக்கின்றன.
இது மிகவும் அரிதான ஒன்று என்றும், 22,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவருக்கும், அவரது கணவருக்கும் மருத்துவ ரீதியிலும், மனநல அடிப்படையிலும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களை தங்களது வழக்கமான வாழ்க்கையைத் தொடருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இவரது குடும்பத்தில் மற்ற சிலருக்கும் இதே போன்ற உடலியல் ரீதியிலான பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இக்குறைபாடு மரபணு அடிப்படையிலானதாக இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
– லெட்சுமி பிரியா