புதுடெல்லி:
ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நேற்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியானாவின் ரோக்தக் நகர் அருகே நேற்று பிற்பகல் 3.32 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானது. அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேகாலயாவின் துரா நகரில் இருந்து மேற்கே 79 கி.மீ. தொலைவில் நேற்று மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதேபோல், லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, லடாக் மற்றும் சத்தீஸ்கர் என கடந்த 4 நாட்களுக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.