டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் தீவிரம் குறையாத நிலையில் விடுமுறை அறிவிப்பை டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா தொற்று, நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் டெல்லி இருக்கிறது.
இந் நிலையில் பள்ளிகள் திறப்பது, மாணவர்களின் கல்வி உள்ளிட்டவை குறித்து இன்று விவாதிக்கப்பட்டது. அதில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 50 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கொரோனா காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று துணை முதலமைச்சர் சிசோடியா அறிவித்தார். புதிய சூழ்நிலைகளை சரிசெய்ய எங்கள் தயார்படுத்தும் விதத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை வடிவமைப்போம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே ஆன்லைன் வகுப்புகள், பெற்றோர் உதவியுடன் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத்தருவது உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.