பூரி: டெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாடுதான் இந்தியாவில் கொரோனா பரவலுக்கான முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பூரியில் ஜெகன்னாதர் கோயிலின் தேரோட்டம் மக்கள் வெள்ளத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு முதலில் தடை விதித்திருந்த இந்திய உச்சநீதிமன்றம், அடுத்த 5 நாட்களில் தனது முடிவிலிருந்து பின்வாங்கியது. இந்தச் சூழலில் விழா நடைபெறவில்லை என்றால், பூரி ஜெகன்னாதர் மன்னித்துவிடுவார் என்றெல்லாம் கூறிய உச்சநீதிமன்றத்தால், எப்படி சில நாட்களுக்குள் தன் முடிவை மாற்றிக்கொள்ள முடிந்தது என்று கேள்வியெழுப்பினர் சமூக ஆர்வலர்கள்.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அக்கோயிலில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு ஏற்கனவே காரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.
தப்லிகி ஜமாத் விவகாரத்தை பெரியளவில் கிளப்பி, அதனால்தான் டெல்லியிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் கொரோனா பரவியது என்று துவேஷம் பரப்பிய பல மீடியாக்கள், பூரி ஜெகன்னாதர் கோயில் தேரோட்ட விஷயத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் போனது ஏன்? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஆனால், அதற்கான சரியான பதில்தான் இருக்கப்போவதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் பலர்.