டில்லி

ள்நாட்டில் உற்பத்தியாகும் விநாயகர் சிலை போன்ற பொருட்களைச் சீனாவில் இருந்து வாங்க வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.   இது குறித்து நாடெங்கும் கடும் பரபரப்பு எழுந்துள்ளது.   எல்லையில் முகாம் இட்டுள்ள சீனப்படைகள் இன்னும் அங்கிருந்து திரும்பச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.  மத்திய அரசு இதற்குச் சரியான விளக்கம் அளிக்காமல் உள்ளது.

நாடெங்கும் தற்போது சீனப்பொருட்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கி உள்ளது.   அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் 500க்கும் மேற்பட்ட சீனப்பொருட்களை பட்டியல் இட்டு அவற்றை இறக்குமதி செய்யவோ விற்கவோ வேண்டாம் என வர்த்தகர்களை கேட்டுக் கொண்டுள்ளது.   அதே வேளையில் இந்தியாவில் உற்பத்தி ஆகும் பலவற்றின் மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தொண்டர்களுடன் காணொளி சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அப்போது அவர், “நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காகச் சீனாவில் இருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறு இல்லை.   ஆனால் நமது நாட்டில் தயாராகும் பல பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஒரு விநாயகர் சிலையை நாம் களிமண் மூலம் உருவாக்க முடியும்.  எனவே அவற்றைச் சீனாவில் இருந்து வாங்க வேண்டாம்.  இதைப் போல் பிளாஸ்டிக் பொருட்களான சோப்பு டப்பாவில் இருந்து ஊதுபத்தி வரை சீனப் பொருட்களாக உள்ளன.   இவற்றை இறக்குமதி செய்வதால் நமது நாட்டின் சுய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும்.   நாம் இவை போன்ற பொருட்களை இந்தியத் தயாரிப்புக்களை வாங்குவதால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.