திருச்சி:
திருச்சி முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதல்வர் 2 நாள் பயணமாக கோவை, திருச்சி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (25ந்தேதி) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் , அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, இன்று திருச்சி வந்த முதல்வர், காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ,அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முக்கொம்பு கதவனை கட்டும் பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,
இன்றைக்கு இந்தியாவில் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்கின்ற முயற்சியில் தமிழகம் சிறந்த முறையில் இப்பணியை ஆற்றி வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கள் மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன், மாவட்ட நிர்வாகமும் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு, அதன் பரவலை தடுக்கின்ற ஒரு நிலையை பார்க்கின்றோம்.
இந்த புதிய நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., நம்முடைய மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை நம்முடைய அரசு அறிவித்து, அதை மாவட்ட நிர்வாகம் முறையாக கடைபிடித்ததன் விளைவாக, வைரஸ் தொற்றை இன்றைக்கு நாம் தடுக்கின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
உலக அளவிலேயே வல்லரசு நாடுகளில் கூட இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியாத ஒரு சூழல் இருக்கின்ற காலகட்டத்தில், தமிழகத்தில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து இன்றைக்கு கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, என்பதையெல்லாம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவிக்க உள்ளார்கள்.
அதேபோல, அம்மாவினுடைய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றது என்ற விவரமும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றன. விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை அம்மாவினுடைய அரசு அறிவித்திருக்கின்றது. அந்தத் திட்டங்கள் எல்லாம் முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர்ந்திருக்கின்றதா என்பதைப் பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க இருக்கின்றோம்.
அதேபோல, அம்மா இருக்கின்ற போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015ல் நடத்தினார். அதில் சுமார் 2,42,160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார். அம்மாவுடைய அரசு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இன்றைக்கு முதலீட்டை ஈர்த்து, சுமார் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்தப் பணிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த தொழில்கள் எந்தளவிற்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதை பற்றியும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அரசு வழங்குகின்ற கடனுதவிகள் முழுமையாக சேருவதற்கு உண்டான ஆலோசனைக் கூட்டமும் இந்த கூட்டத்திற்கு பிறகு நடைபெற இருக்கிறது.
அதேபோல, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு அறிவித்த கடன்கள் முழுமையாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சென்றடைந்து, அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டார்களா என்ற விவரங்கள் எல்லாம் இந்த கூட்டத்திற்கு பின்பு விவாதிக்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதைத்தொடர்ந்து, முக்கொம்பு கதவணை கட்டும் பணியை நேரில் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது, கதவணை கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கதவணை கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், 2021 ஜனவரிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த முக்கொம்பு பழைய கதவணை 2018 ஆகஸ்ட் மாதம் வெள்ளப்பெருக்கால் உடைந்தது. இதனையடுத்து ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில புதிய கதவணை கட்டப்படுகிறது. கதவணை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.