பின்லேடனை ‘தியாகி’ என வர்ணித்து வாங்கி கட்டிக்கொண்ட இம்ரான் கான்..
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களைத் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் உயிர் இழக்கக் காரணமாக இருந்தவர், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன்.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பின்லேடனை. அமெரிக்கப் படை வேட்டையாடி அழித்தது.
இந்நிலையில்,பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று உரை நிகழ்த்திய பிரதமர் இம்ரான் கான், பின் லேடனை ’’தியாகி’’ என்று வர்ணித்துள்ளார்.
‘’ பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்துக்கு அமெரிக்கர்கள் வந்தார்கள். ஒசாமா பின் லேடனை கொன்றார்கள். அதன் மூலம் அவரை தியாகி ஆக்கி விட்டனர்.
நமக்குக் கூட தெரியாமல் நமது மண்ணில் பின் லேடனை கொன்றதால், பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் சாபம் கிடைத்தது தான் மிச்சம்’’ என்று அவர் பேசினார்.
இம்ரான் கான் பேச்சை, பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
‘நமது நாட்டுக்குள் தீவிரவாதத்தைக் கொண்டு வந்தவர் பின் லேடன். அவர் ஒரு தீவிரவாதி. பின் லேடனை தியாகி என்று சொன்னால், அவரது அல்கொய்தா இயக்கத்தினரால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு என்ன மரியாதை?’’ என்று வினா எழுப்பியுள்ளன, எதிர்க்கட்சிகள்.
-பா.பாரதி.