சென்னை

ன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 20 ஆம் நாளாக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.   கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகெங்கும் அனைத்து வாகனம் மற்றும் தொழிலகங்கள் நிறுத்தப்பட்டன.  இதனால் கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்துக்கு சரிந்தது.

ஆயினும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அந்த சமயங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்கவில்லை.  மாறாக மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை அதிகரித்தன.

இந்த மாத ஆரம்பத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.  இந்த விலை ஏற்றத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.

இவ்வாறு கடந்த 7 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை 20 நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.   இந்த 20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.83  மற்றும் டீசல் விலை ரூ.9.22 உயர்ந்துள்ளது.  இது வரலாற்றில் முதல் முறையான உயர்வாகும்.

சென்னை நகரில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.37 என விற்கப்படுகிறது.   டீசல் ஒரு லிட்டர் ரூ.77.44 என விற்பனை ஆகிறது.   இத்தகைய விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும் அத்தியாவசிய பொருட்களும் விலை உயரலாம் என அஞ்சப்படுகிறது.