டெல்லி :

லகின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தை வழிநடத்திய கட்சி.
அதன் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவது மிகவும் அபாயகரமானது. பாஜகவின் பாசாங்கு மற்றும் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் இது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தனது ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை சரியாக கையாள தெரியாமல், ஒரு பேரழிவிற்கு வழிநடத்தும் பாஜக, அதை திசை திருப்ப, காங்கிரஸ் கட்சி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோர்த்து இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் அழைப்பின் பேரில் பிரதிநிதிகள் கலந்துகொள்வது சாதாரணமானது, உலகெங்கிலும் உள்ள ஏராளமான முக்கிய அரசியல் கட்சிகளுடன் தலைமைப் பிரதிநிதிகள் பரிமாற்றத்தை காங்கிரஸ் கட்சி செய்துவருகிறது இதில் என்ன தவறு?

சரோஜ் பாண்டே தலைமையிலான பா.ஜ.க. மகளிர் குழு சீனா சென்றது

பாஜக-வுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் இதுபோன்ற கட்சி பிரதிநிதிகள் பரிமாற்றம் ஏதும் இல்லை என்று ஜெ.பி. நட்டா கூறுவாரா ?

ஜனவரி 2011 ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பெயரில் சீனாவுக்கு பாஜக தலைவர் தலைமையில் குழு செல்லவில்லையா ?

பிப்ரவரி 2015 இல் பாஜக தலைவர் அமித் ஷா சீன அமைச்சர் வாங் ஜியாருவை வரவேற்கவில்லையா ?

ஆகஸ்ட் 2019 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுவை பாஜக தனது தலைமையகத்தில் வரவேற்கவில்லையா?

பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இந்த தலைமை பரிமாற்றத்தை காங்கிரஸ் கட்சி எப்போதாவது தேச துரோகமாக குறிப்பிட்டதா?

என்று சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக 2008 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது