டெஹ்ராடூன்: சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை வாரியம் அமைத்த உத்ரகாண்ட் மாநில அரசின் முடிவை எதிர்த்து, அனைத்து சார் தாம் கோயில்களின் குருக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து, கேதர்நாத் கோயிலின் குருக்கள் ஒருவர், தனி நபராக வெற்று உடம்பில்(குளிர் நிறைந்த பகுதியில்) கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் பெயர் சந்தோஷ் திரிவேதி. அவர், தியான நிலையில் அமர்ந்து, கடந்த 10 நாட்களாக தனது போராட்டத்தை நடத்தி வருகிறார்.
சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை வாரியம், மொத்தம் 51 கோயில்களை நிர்வகிப்பதற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இத்தகைய ஒரு வாரியத்தை அமைப்பதன் மூலம், குருமார்களை ஓரங்கட்டி, கோயில் தொடர்பான விவகாரங்களில் அரசே அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக்கொள்ள முயல்கிறது என்பது அந்த குருமார்களின் குற்றச்சாட்டு.
கடந்தாண்டு டிசம்பரில், இந்த வாரியம் அமைப்பதற்கான சட்டத்தை, ஒரு சிறிய திருத்தத்துடன் உத்ரகாண்ட் மாநில சட்டசபை நிறைவேற்றியது.