டெல்லி:

லைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் கூடியது. இதில் சீன விவகாரம், எல்லைப் பிரச்சனை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதே வேளையில், லடாக் கல்வான் எல்லைப்பகுதியில், இந்திய, சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதல், 20 இந்திய வீரர்கள் பலியான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்ம்ரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்பட மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், கொரோனா தடுப்பு நிவாரண நிதி, ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக  முக்கிய முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.