சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான அவகாசம் 2 மாதங்கள் நீடித்து உத்தரவிட்ட நிலையில், மேலும் நீட்டிக்க முடியாது என்று தமிழக மின்வாரியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சென்னை உள்பட  4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் காலஅவகாசமும்,  ஜூலை 15-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று தமிழ்நாடு மின் வாரியம் பதில் அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால், தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 24ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் மின் கட்டணம் கணக்கீடு செய்வதும் தாமதமானது.  தொடர்ந்து 4 மாதங்களுக்கு மொத்தமாக மின்சாரம் கணக்கிடு செய்தால், கட்டணம் அதிகமாகும் என்பதால், மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கறிஞர்  ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திரந்தார். அவரது  மனுவில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை உபயோகப்படுத்தப்பட்ட மின் கட்டணத்தை மே 6-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் மின் கட்டணம் செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் மின்கட்டணம் செலுத்த வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு,  நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார்.  விசாரணையின்போது,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கடந்த ஜூன் 15 – ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15 -ஆம் தேதிக்குள் என்ற காலக்கெடு வுக்குள் 75 சதவீத நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்தி விட்டதால் மின் கட்டணம் செலுத்து வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கமுடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்  ஜூன் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.