டில்லி

தொழிலகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வரும் பொருட்களின் பட்டியலை மத்திய  அரசு கேட்டுள்ளது.

இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் பழனி உள்ளிட்ட 20 பேர் உயிர் இழந்தனர்.   சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.    சீனப்படைகள் ஆணிகள் பதித்த ராடுகள் மற்றும் கட்டைகளை கொண்டு கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.   இதனால் நாடெங்கும் சீனா மீது கடும் வெறுப்பு அலை வீசி வருகிறது.

அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு சீன இறக்குமதி பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.   மேலும் 500க்கும் மேற்பட்ட  தினசரி உபயோக சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை தடை செய்ய அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது   அத்துடன் 50க்கும் மேற்பட்ட சீன மொபைல் செயலிகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழிலகங்கள் சீனாவிடம்  இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலை இன்று அளிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  அத்துடன் அதில் அவசியம் மற்றும் அவசியமற்ற பொருட்களைப் பிரித்துக் காட்டவேண்டும் எனவும் அரசு கூறி உள்ளது.  குறிப்பாகத் தொழிலகங்கள் இயங்க மிகவும் அத்தியாவசியமான சீனப் பொருட்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர்,”இந்த பட்டியலைக் கொண்டு இந்த பொருட்களில் எவை இந்தியாவில் தயாரிக்க இயலவில்லையோ அவற்றை மட்டும் தற்போது இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.   அத்துடன் அத்தகைய பொருட்களையும் இந்தியாவில் தயாரிக்க அல்லது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.   இந்தியா இனி சீனாவை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்னும் முடிவுக்காக இந்த பட்டியல் கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது ஆட்டோமொபைல், மருந்து விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக், ஃபர்னிச்சர் போன்றவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.    இவற்றை முழுவதுமாக குறைக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  மத்திய அரசு அளிக்கும் ஒப்பந்தப் புள்ளிகளில் சீன நிறுவனங்கள் கலந்துக் கொள்ளத் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.