தமிழ்நாட்டின் மாநில மரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம், பனை.
இது வனவிலங்குகளுக்கு உணவு, நமது கால்நடைகளுக்குத் தீவனம், நீர்நிலைகளுக்குச் செறிவூட்டுதல், பல்லுயிர்ப் பெருக்கம், மனிதனுக்கு வேலைவாய்ப்பு என்று வேரில் இருந்து பழம் வரை அத்தனையும் பயனளிக்கக் கூடியது. மேலும் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது பனை.
ஆனால், பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து பனை மரங்கள் அதிகளவு அழிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பனையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் பலரும் இதைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பலனாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடந்த 2018-ம் ஆண்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நதி மேம்பாட்டுக் குழு உட்படப் பல தன்னார்வலர்கள் இணைந்து கோவை மாவட்டம் முழுவதும் குளக்கரைகளில் ஒரு லட்சம் பனை விதைகளை நட்டனர்.
ஒரு வாரத்துக்கும் மேல் களப்பணிகளில் ஈடுபட்டு பனை விதைகளை நட்ட அந்தச் சம்பவம் கோவையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, இரண்டாண்டுகள் ஆகியுள்ள நிலையில், கோவையின் பல குளக்கரைகளில் அந்தப் பனை விதைகள் துளிர்விட்டு வளரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ”கோவையின் அனைத்து குளக்கரைகளிலுமே பனை மரங்கள் அதிகம் காணப்படும். ஆனால், நாளடைவில் அவை எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. நீர்நிலைகளுக்குச் செறிவூட்டுவதற்குப் பனை மரங்கள் மிகவும் அவசியம். அதனால்தான் பனை விதைகளை நட்டோம். தற்போது உக்குளம், புதுக்குளம், வெள்ளலூர் குளம், கோளராம்பதி குளம், மதுக்கரை உள்ளிட்ட குளக்கரைகளில் அந்த விதைகள் துளிர்விட்டு வளரத் தொடங்கியுள்ளன. நடப்பாண்டில் நல்ல மழை பெய்தால், அவை இன்னும் வேகமாக வளரும். அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட குளக்கரையைத் தேர்ந்தெடுத்து அங்கு பனை விதைகளை நட்டு, அவற்றைப் பராமரிக்க உள்ளோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இப்பணி தொடர்ந்து பனை மரங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு பெரிய அளவில் வளர்ந்தால் இம்மண்ணிற்குப் பலவகையிலும் பலவகை நன்மைகள் காத்திருக்கின்றன.
– லெட்சுமி பிரியா