காய்கறியைப் பையில் போடு.. கல்லாப்பெட்டியில் காசை போடு..
மலைகள் நிறைந்த வட கிழக்கு மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக, விவசாயிகள் , தங்கள் விளை பொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடிவதில்லை.
இதனால் மணிப்பூர் மிசோரம் போன்ற மாநிலங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் ஆளில்லா காய்கறி கடைகளைத் திறந்துள்ளனர்.
ஆளில்லா கடைகள் என்றால் என்ன அர்த்தம்?
மரத்தடிகளைக் கொண்டு தற்காலிக கடைகள் அமைத்து, அதில் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளைப் பரப்பி விட்டுப் போய் விடுவார்கள்.
காய்கறிகள் மீது ,அவற்றின் விலை குறிக்கப்பட்டிருக்கும்.
அந்த சாலைகளில் பயணம் செய்வோர், தங்களுக்குத் தேவையான காய்கறிகளை எடுத்து பையில் போட்டு விட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் கல்லாப்பெட்டியில் காசை போட்டு விட்டு நகரலாம்.
கொரோனா தொற்று அச்சம், தனி நபர் இடைவெளி, பேரம் பேசுதல், போன்ற தொந்தரவுகள் இல்லாத இந்த கடைகள் சிலவற்றில், வாடிக்கையாளர்கள் குடிப்பதற்கு, ஜார்களில் தண்ணீரும் நிரப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை வெளி உலகத்துக்குத் தெரிவித்துள்ள மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, ஆளில்லா கடைகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
-பா.பாரதி