”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’
இலங்கையில் உள்ள சிங்கள ராணுவத்துக்குத் தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் ஆவின் பால் சப்ளை செய்யுமாறு அந்த நாட்டில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள தனியார் ஏஜென்சி தமிழக அரசை அணுகியது.
ஆனால் இந்த வேண்டுகோளைத் தமிழக அரசு நிராகரித்து விட்டதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்’’ இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராணுவத்துக்கு ஆவின் பால் சப்ளை செய்வதைத் தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால், அந்த தனியார் ஏஜென்சியின் கோரிக்கையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார்’’ என்று கூறினார்.
‘’ எனினும் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்கிளப்பு ஆகிய பகுதிகளுக்கு ஆவின் பால் சப்ளை செய்யக் கோரிக்கை வந்துள்ளதாகக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி,’’இதனைத் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது’’ என்றார்.
-பா.பாரதி