கொரோனா பீதியால் ஊருக்குள் விரட்டப்படும் மாவோயிஸ்டுகள்..
மாவோயிஸ்டுகளின் பலம் பொருந்திய தளமாகக் கருதப்படுவது, சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் பிராந்தியம்.
இங்குள்ள காட்டில் மறைந்து வாழும், தீவிரவாதிகளில் யாருக்கேனும் காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால், அவர்களை தங்கள் முகாம்களில் இருந்து மாவோயிஸ்டுகள் வெளியேற்றுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அங்குள்ள பீஜாபூர் மாவட்டம் மோடக்பால் என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்ட் முகாமில் இருந்த பெண் மாவோயிஸ்ட் சுமித்ரா என்பவருக்குக் காய்ச்சல், மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை முகாமில் இருந்து மாவோயிஸ்டுகள் வெளியேற்றியுள்ளனர்.
வனப்பகுதியில் தனியாக நின்ற போது, போலீசில் சிக்கிய அவர், பின்னர் அங்குள்ள கொரோனா சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஊருக்குள் கொரோனா அறிகுறியுடன் யாரேனும் மாவோயிஸ்டுகள் நடமாடினால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீசார் , பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனாவுடன், மாவோயிஸ்டுகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
– பா.பாரதி