கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்துகளின் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை பற்றிய ஒரு சிறப்பு பார்வையைக் காணலாம். தடுப்பு மருந்து ஆய்வாளர்களில், தற்போது மனித சோதனைகள் நடந்து வருகின்றன. அவர்களில் முன்னணியில் உள்ளவர்கள், அஸ்ட்ராஜெனிகா, ஃபைசர், பயோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், மெர்க், மாடர்னா, சனோஃபி மற்றும் சீனாவின் கன்சினோ பயாலஜிக் ஆகியோர் ஆவர்.
உலகெங்கிலும் உள்ள கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை, 4,18,000 இறப்புகளுடன், 7.41 மில்லியனைத் தாண்டினாலும், ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் முன்னணியில் உள்ள முக்கிய நிறுவனங்கள் இரண்டு – முதலில், அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க், இரண்டாவது, சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட். இந்நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளில் குறிப்பிடத்தக்க சாதகமான முடிவுகளுடன் முன்னணியில் உள்ளன. சமீபத்திய முன்னேற்றமாக, மாடர்னா இன்க் தனது mRNA -1273 தடுப்பு மருந்தின் எலிகளின் மீதான சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன்படி, நோயின் கடுமையான கட்டத்தில் செய்ய வேண்டிய ஆய்வுகளை இதற்கு பின்னர் தான் தொடங்கவுள்ளது என்றாலும், இதுவரை கிடைத்துள்ள முடிவுகளை வைத்து, இம்மருந்து கடுமையான நோய்கள் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்க்கும் என்ற உறுதியைக் கொடுத்துள்ளது. மறுபுறம், சீன நிறுவனமான சினோவாக் பயோடெக்கின் செயலிழக்க செய்யப்பட வைஈஸ் சார்ந்த இதன் தடுப்பு மருந்து,- “கொரோனாவாக்” – பிரேசிலில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது.
உலக நாடுகள் முழுவதிலும் இருந்து, 100 க்கும் மேற்பட்ட சாத்தியமான கோவிட் -19 தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்ட பல்வேறு கட்ட சோதனைகளில் இருந்தாலும், தற்போது மனித சோதனைகளில் முன்னணியில் உள்ள கோவிட் -19 தடுப்பு மருந்து ஆய்வாளர்களான அஸ்ட்ராஜெனிகா, ஃபைசர், பயோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், மெர்க், மாடர்னா, சனோஃபி மற்றும் சீனாவின் கன்சினோ பயாலஜிக்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு மனித சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியரான ராபின் ஷாடோக், “ஆரம்பகால தடுப்பு மருந்துகள் வரம்புகளைக் கொண்டிருக்கக்கூடும்,” என்று கூறியுள்ளார்.
மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் நிலை
மாடர்னா இன்க் தனது தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது. மேலும், மூன்றாம் கட்ட சோதனைகளுக்கான ஆய்வு வழிமுறைகளை உருவாக்கி இறுதி செய்துள்ளது. இதில் சுமார் 30,000 பங்கேற்பாளர்கள் பங்குபெறவுள்ளனர். மேலும், மருந்து கொடுக்கப்படாத மற்றும் மருந்தை போன்ற போலி மருந்து கொடுக்கப்பட்ட ஒப்பீட்டு குழுக்களும் இடம்பெறும் வகையில் ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தடுப்பு மருந்து, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களால் கூட்டாக உருவாக்கப்பட்டது. இது எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வுகளில், கடுமையான நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்காது என்றும், ஒரு டோஸ் புதிய தனித்துவ கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கக்கூடும் என்றும் உறுதியளித்துள்ளது.
“நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் டோஸை தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டிற்கு 1 பில்லியன் டோஸ் வரை, நிறுவனத்தின் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி தளத்திலிருந்து தொடங்கி லோன்சாவுடன் செய்துள்ள ஒப்பந்த ஒத்துழைப்புடன் தயாரித்து அளிக்கவுள்ளது ,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பு மருந்து எவ்வித நச்சு விளைவுகளும் இன்றி, நுரையீரல் மற்றும் மூக்கில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பளிப்பதாகவும் இக்குழு தெரிவித்துள்ளது. வைரஸுக்கு வெளிப்படும் முன் ஒரு டோஸ் மருந்தைப் பெற்ற எலிகள், ஏழு வாரங்களுக்கு பின்னும் எவ்வித வைரஸ் தொற்றும் இல்லாமல் தங்கள் நுரையீரலைக் காத்துக் கொண்டன. அதாவது நுரையீரலில் நுழைந்த வைரஸ்கள் தன்னைத்தானே நகலெடுத்து புதிய வைரஸ்கள் உருவாக்குவது தடுக்கப்பட்டது. எனவே ஒரு ஒற்றை தடுப்பு மருந்து வைரஸ் நுரையீரலில் நகலெடுப்பதைத் தடுத்துள்ளது.
மே 6 அன்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) mRNA -1273 தடுப்பு மருந்தின் அடுத்தக் கட்ட ஆய்வுகளுக்கான மற்றும் புதிய மருந்துக்கான விண்ணப்பத்தை மறுஆய்வு செய்து மே 11 அன்று விரைவான அனுமதியை வழங்கியுள்ளது. மே 18 அன்று, மாடர்னா தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (என்ஐஐஐடி) தலைமையிலான mRNA -1273 இன் கட்டம் 1 ஆய்வின் ஆரம்ப தரவை அறிவித்தது. கடந்த மாதம், மாடர்னா சிறிய அளவிலான ஆரம்ப கட்ட தரவுவை வெளியிட்டிருந்தது. இதன்படி, இந்த தடுப்பு மருந்து ஆரோக்கியமான தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை வெற்றிகரமாக உருவாக்கியது.
சினோவாக் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் நிலை
சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் அதன் “கொரோனாவாக்” தடுப்பு மருந்தின் மூன்று பகுதிகளைக் கொண்ட மூன்றாம் கட்ட மனித பரிசோதனையின் இறுதி கட்டத்தை நடத்த பிரேசிலில் ஒரு மருந்து தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்று நிறுவனத்தின் ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. பிரேசிலிய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், ஜூலை மாதம் 9,000 பேர் பங்குபெறவுள்ள ஆய்வை சினோவாக் மற்றும் இன்ஸ்டிடியூடோ புட்டான்டன் தொடங்குவார்கள். அந்த பிரேசிலிய மருந்து உற்பத்தி நிறுவனம், இந்த சீன தடுப்பு மருந்துக்கு உரிமம் பெற்று தென் அமெரிக்க நாட்டில் கிடைக்கச் செய்யும் என்று சினோவாக் கூறியுள்ளது. இதற்கிடையில், பூர்வாங்க கண்டுபிடிப்புகளில், சினோவாக் பயோடெக் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் மனித சோதனைகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும் திறன் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
கொரோனாவாக் தடுப்பூசி கடுமையான பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை. மேலும் 14 நாள் இடைவெளியில் தடுப்புமருந்து கொடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைரஸை செயலிழக்கச் செய்யும் ஆன்டிபாடிகள் இரத்தத்தில் உருவாகியிருந்தது. கொரோனா வைரஸின் கொல்லப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும், சினோவாக்கின் தடுப்பு மருந்து, இதுவரையிலான ஐந்து சீன மருந்துகளை விட, முக்கியமான மனித சோதனைகள் கட்டத்தை எட்டியுள்ளது. இது பொது பயன்பாட்டிற்கு வரும் முன்னர் இந்த சோதனையை நிறைவு செய்யப்படும்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் நிலை
AZD1222 தடுப்பு மருந்து, பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கி வரும் தயாரிப்பு ஆகும். தற்போது, 10,000 தன்னார்வலர்களுடன் இரண்டாம் கட்ட சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் கடைசி கட்ட சோதனைகள் பிரேசிலில் நடத்தப்படும். ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கான ஆய்வு, சோதனை கோவிட் -19 தடுப்பு மருந்தை ஏப்ரல் மாதத்தில் பிரிட்டனில் 18 முதல் 55 வயதுடைய 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
இதற்கிடையில், அஸ்ட்ராஜெனிகா ஐரோப்பாவின் இன்க்ளுசிவ் வேக்ஸின் அல்லையன்ஸ் உடன், 400 மில்லியன் டோஸ்கள் வரை உற்பத்தி செய்து வழங்க ஒப்பந்தமிட்டுள்ளது. தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்த, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பு மருந்துகளை வழங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில், அஸ்ட்ராஜெனிகா தனது சோதனைத் தடுப்பு மருந்தின் உற்பத்தியை பெருமளவில் தொடங்கியதாகவும், செப்டம்பரில் இரண்டு பில்லியன் டோஸ் வரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கேம்பிரிட்ஜை தளமாகக் கொண்ட நிறுவனம், மனித சோதனைகளில் வெற்றிகரமாக இருந்தால், அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டோஸ்களையும், இங்கிலாந்துக்கு 100 மில்லியனையும் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் நிலை
ஆரம்பத்தில் செப்டம்பர் மாதத்திற்கு திட்டமிட்ட அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், அதன் மறுசீரமைப்பு Ad26.COV2-S தடுப்பு மருந்துக்கான மனித மருத்துவ பரிசோதனைகளை ஜூலை மாத இரண்டாம் பாதியில் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு – பாரம்பரிய மருத்துவ பரிசோதனை திட்டத்தில் ஜே & ஜே பங்கேற்க இந்த முடிவுகள் உதவலாம். மார்ச் மாதத்தில், ஜே & ஜே அமெரிக்க அரசாங்கத்துடன் 2021 ஆம் ஆண்டில் 1 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய போதுமான உற்பத்தி திறனை உருவாக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
“நாங்கள் இதுவரை கண்ட மருத்துவத்திற்கு முந்தைய தரவுவின் வலிமை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடனான தொடர்புகளின் அடிப்படையில், மருத்துவ வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த முடிந்தது” என்று தலைமை அறிவியல் அதிகாரி பால் ஸ்டோஃபெல்ஸ் கூறினார். 18 முதல் 55 வயது வரையிலான 1,045 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடமும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடமும் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான ஆரம்ப அறிகுறிகளை இந்த ஆய்வு சோதிக்கும். இந்த சோதனைகள் அமெரிக்கா மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறும்.
இந்நிறுவனம் அலர்ஜி மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனங்களுடன் (என்ஐஐஐடி) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோவிட் -19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் எபோலா, ஜிகா வைரஸ், ஆர்.எஸ்.வி, எச்.ஐ.வி தடுப்பு மருந்தை உருவாக்க பயன்படுத்துவதைப் போன்றது.
ஒருவழியாக தடுப்பு மருந்துகள் உருவாகி வருகின்றன!!!
தமிழில்: லயா