புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயனின் பெயர், பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது 51 வயதாகும் விஜயனின் பெயர், இந்தியக் கால்பந்து கூட்டமைப்பால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த விஜயன், கடந்த 1989ம் ஆண்டு இந்தியக் கால்பந்து அணியில் அறிமுகமானார். இவர் பங்கேற்ற 79 போட்டிகளில் 40 கோல்களை அடித்துள்ளார். கடந்த 2000-2003 வரை இந்திய கால்பந்து அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்தார்.

உள்ளூர் போட்டிகளிலும் கேரளா போலீஸ், மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற அணிகளுக்காக இவர் பங்கேற்றுள்ளார். கடந்த 2003ம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

“எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்க பரிந்துரை செய்த இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிற்கு நன்றி. விருது கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றுள்ளார் விஜயன்.

பத்மஸ்ரீ விருதை, இந்தியாவில், ஏற்கனவே 6 கால்பந்து நட்சத்திரங்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.