டில்லி
எல்லையில் சீனா நடத்தி வரும் மோதல் காரணமாக அகில இந்திய வர்த்தக அமைப்பு 500க்கும் மேற்பட்டப் பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தப் பட்டியல் இட்டுள்ளது.
இந்திய எல்லையான லடாக் பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் சீன ராணுவம் முகாம் இட்டது. அதையொட்டி இந்திய ராணுவமும் தனது படைகளைக் குவித்தது. இதனால் எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவியது. பதட்டத்தை தவிர்க்க ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் ஒரு முடிவுக்கு வராமல் இருந்தது.
கடந்த ஆறாம் தேதி அன்று இந்தியச் சீனா உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சீனப்படைகள் திரும்பிச் செல்ல ஒப்புக கொண்டன. அவ்வாறு திரும்பிச் செல்லும் போது நேற்று முன் தினம் இரவு சீனப் படைகள் இந்தியப் படைகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதில் தமிழக வீரர் பழனி உள்ளிட்ட இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிர் இழந்தனர்.
இதனால் இந்திய மக்கள் சீனாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய வர்த்தக அமைப்பு சீனாவுடனான வர்த்தகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. முதல் கட்டமாகச் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களில் 13 பில்லியன் டாலர் அதாவது ரூ.1 லட்சம் கோடிக்கு வரும் டிசம்பர் 2021க்குள் நிறுத்த கோரி உள்ளது.
இதையொட்டி அந்த அமைப்பு சீனாவில் இருந்து வரும் 500க்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிட்டு அவற்றைத் தடை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது. இதில் பொம்மைகள், துணிகள், ஆடைகள், தினசரி உபயோக பொருட்கள், சமையல் சாதனங்கள், ஃபர்னிச்சர்கள், வன்பொருள், காலணிகள், கைப்பைகள், பெட்டிகள் மின்னணு பொருட்கள் அழகுற்றும் பரிசு பொருட்கள், கடியாரங்கள், நகைகள், காகிதம், எனப் பல அடங்கும்.
தற்போது இந்தியா வருடத்துக்கு சுமார் ரூ.5.25 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி செய்து வருகிறது. முதல் கட்டத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதை அமைப்பு தடை செய்யக் கோரி உள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்புக்களில் கிடைப்பதாக அறிவித்துள்ள இந்த அமைப்பு இந்தியாவில் தயாரிக்கப்படாத பொருட்களை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து ஆராய்வதாகவும் அறிவித்துள்ளது.