டெல்லி: எந்த சூழ்நிலையாக இருந்தாலும் இந்தியா பதிலடி கொடுக்க தயங்காது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.  2ம் கட்டாக இன்றைய அமர்வில் தமிழகம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா போன்ற கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்கிறார்.

அதற்கான கூட்டம் தொடங்கிய போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது: எல்லையில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது. வீரமும் தீரமும் இந்தியர்களின் பண்பு. இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியா அமைதியையே விரும்புகிறது, தேவைப்பட்டால் பதிலடி கொடுக்க தயங்காது.

அந்த சக்தியை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். இந்தியாவின் உரிமையில் ஒருபோதும் சமரசம் கிடையாது. எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகம் வீண்போகாது. எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம் என்று கூறினார்.