டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை காரணமாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை பிரதமர் மோடி தவிர்த்து உள்ளார்.
இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சீனா தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லடாக் எல்லை பிரச்னை காரணமாக பதற்றம் உருவாகி உள்ள நிலையில், பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். நாட்டின் பாதுகாப்பு, எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந் நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாமல் பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். அவருக்கு திங்கட்கிழமை பிறந்த நாளாகும்.
2016ம் முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து சொல்ல தவறுவது இல்லை. அப்போது அவர் டுவிட்டரில் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.
இதற்காக, பிரதமர் மோடி சீனாவின் வலைதளமான வைபோ-இல் ஒரு கணக்கை தொடங்கினார். அணுசக்தி வினியோக குழுவில் இந்தியா இடம்பெறுவதை சீனா 2016ம் ஆண்டு எதிர்த்தது. அப்போது கூட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கிற்கு வழக்கம் போல தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.
2016ம் ஆண்டு முதல், பிரதமர் மோடி தமது பிறந்தநாளில் ஜின்பிங்கை வாழ்த்தத் தவறியதில்லை. இருதரப்பு மோதல்களின் போதும் கூட தொடர்ந்து அதைச் செய்தார். ஆனால் இப்போது சீனாவுடனான எல்லை பிரச்னை ஒருபக்கம் இருக்கும் நிலையில் பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை.