டெல்லி: கொரோனா தொற்று விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மக்களை திசைத்திருப்புகிறார் என்று அம்மாநில காங். தலைவர் அனில் சவுத்திரி குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆளுநர் அனில் பைஜால், கெஜ்ரிவால், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
கூட்டத்தில் பங்கேற்ற பாஜக, காங், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விதிக்கப்படும் கட்டணத்தை அரசு முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி மாநில காங். தலைவர் அனில் சவுத்திரி கூறியதாவது: முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களை திசை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதற்கான ஆதாரங்களை நாங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்துள்ளோம்.
தனியார் மருத்துவனைகளை அரசு தன் பொறுப்பில் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். 2609 படுக்கைகளுடன் கூடிய 3 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் இதுபற்றி முதல்வர் எந்த கருத்துகளை கூறாமல் உள்ளார்.
கொரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இன்று வரை இழப்பீடு வழங்கவில்லை என்று அவர் கூறினார்.