பெங்களூரு: வேளாண் நிலங்களை விரும்பும் யாரும் வாங்க முடியும் என்ற வகையில், தனது நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியுள்ளது கர்நாடக அரசு.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கர்நாடக மாநிலத்தில் இதற்கு முன்னதாக, விவசாயிகள் அல்லாத யாரும் வேளாண் நிலங்களை வாங்க முடியாது. மேலும், வேளாண்மை பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட, அவர்களின் வேளாண்மை சாராத வருவாய் ஆண்டிற்கு ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவர்கள் தவிர, கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், கம்பெனிகள், கூட்டுறவு சொசைட்டிகள் போன்றவைதான் விவசாய நிலங்களை வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. எனவே, தற்போது அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, வேளாண்மை துறையில் முதலீடு செய்ய விரும்பும் யாரும், விவசாய நிலங்களை வாங்கலாம் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலச் சீர்திருத்த சட்டத்தின் பிரிவுகள் 79(a), (b), (c) மற்றும் 80 ஆகிய பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் அதிகபட்சமாக வைத்திருக்கக்கூடிய விவசாய நிலத்தின் அளவிலும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மாற்றங்களின் மூலம் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களும் விவசாய நிலங்களை வாங்கும் நிலை அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக அரசு, புதிதாக சட்டம் வெளியிடாது என்றும், தற்போதைய திருத்தச் சட்டம் அடுத்த சட்டசபைக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.