சென்னை: தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து.

கடந்த 2019ம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார் கோமதி மாரிமுத்து.

ஆனால், ‍அதன்பிறகு இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ‘அனபோலிக் ஸ்டெராய்டு நான்ட்ரோலன்’ என்ற ஊக்கமருந்தை இவர் பயன்படுத்தினார் என்று செய்திகள் வெளியாகின. பின்னர் ‘பி’ சாம்பிள் சோதனையிலும் அந்தக் குற்றச்சாட்டு உறுதியானதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, அவரின் தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 2019ம் ஆண்டு மார்ச் 18 முதல் அதே ஆண்டின் மே 17 வரை இவர் வென்ற பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் தரவரிசைப் புள்ளிகள் அனைத்தும் தகுதியிழப்பு செய்யப்பட்டன.

அவருக்கு 2019, மே 17 முதல், 2023 மே 16 வரையில் மொத்தம் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தன்மீதான குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து வருகிறார் கோமதி மாரிமுத்து. அவர் கூறியுள்ளதாவது, “எவ்வித தடைசெய்யப்பட்ட மருந்தையும் நான் பயன்படுத்தவில்லை. இது உறுதி. ஒருவேளை நான் உட்கொண்ட அசைவ உணவில் அது கலந்திருந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்.

எனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளேன். அதற்காக, மாநில அரசின் உதவியை எதிர்பார்க்கிறேன்” என்றார்.

[youtube-feed feed=1]