ஓயவே ஓயாத புலம்பெயர் தொழிலாளர்களின் புலம்பல்கள்….
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு மூன்று நாட்கள் முன்னதாகத்தான் இங்கே ஆந்திர மாநிலம் தடாவிலுள்ள ஓர் டயர் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்துள்ளார் 37 வயதான சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச்சேர்ந்த சிராஜ் கான்.
தற்போது சொந்த ஊர் செல்ல என்ன செய்வதென்று தெரியாமல் தன்னுடன் பணியிலிருந்த இன்னொருவருடன் சேர்ந்து தடா அருகிலிருக்கும் பெரிய நகரமான சென்னையை நோக்கி நடந்தே வந்துள்ளார். அப்படி இவர்கள் வரும்போது தான் இவர்களைப்போலவே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சட்டிஸ்கர் மாநிலத்தினர் பலரை சந்தித்துள்ளனர். இவர்கள் மொத்தம் 34 பேர்களும் சென்னை நகருக்குள் வந்து விட்டு சென்ட்ரல் இரயில் நிலையம் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்ய என்று இதுவரை ரூ. 2,000/- செலவழித்துள்ளனர். “இங்க ஆட்டோக்காரங்க கூட எங்கள விட்டு வைக்கல. கொள்ளையடிக்கிறாங்க” என்கிறார் பரிதாபமாக.
சென்னையில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது பற்றி அறியாமல் வந்துவிட்ட இவர்கள் செய்வதறியாமல் சென்னை கலெக்டரிடம் சென்று முறையிட அவர் கார்ப்பரேஷன் அலுவலகம் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.
“நாங்க மொத்தமே 34 பேர்தாங்கிறதால தனி ரயில் எல்லாம் வாய்ப்பில்ல. தனி பஸ் ஏதாவது ஏற்பாடு பண்ணினா நல்லாருக்கும். வெளில பஸ்க்கு எவ்ளோனு விசாரிச்சா ஒரு ஆளுக்கு ரூ. 3,700/- கேக்குறாங்க. எங்களோட ஏழு பேர் பெண்கள் வேற இருக்குறாங்க” என்று புலம்புகிறார்.
இவர்களோடு ஒடிசாவைச்சேர்ந்த ஒரு குழுவும் சென்ட்ரல் நிலையம் வந்திருக்கிறது ரயிலில் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில். இவர்களுடன் பிறந்து 17 நாட்களே ஆன குழந்தையுடன் ஒரு தாயும் அடக்கம். இவர்கள் அனைவரும் தற்போது சிந்தாரிபேட்டையிலுள்ள ஓர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனராம்.
இவர்களைப்போலச் சொந்த ஊர் செல்ல வழி தெரியாமல் அல்லாடுவோர் இன்னும் எத்தனை பேர்களோ, தெரியவில்லை.
– லெட்சுமி பிரியா