இந்திய ரிசர்வ் வங்கியானது, பருவநிலை பொருளாதார வல்லுநர்கள்(climate economists) மற்றும் பணத்திற்கான எதிர்கால மதிப்பீட்டாளர்கள்(money futurist) பணியிடங்களை தாமதமின்றி உருவாக்கி, அதில் தகுதியான ஆட்களை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார் கட்டுரையாளர் அமோல் அகர்வால்.
அவர் கூறுவதாவது; டென்மார்க் மற்றும் நியூசிலாந்து நாட்டின் மத்திய வங்கிகள், புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. டென்மார்க் மத்திய வங்கி, பருவநிலை பொருளாதார வல்லுநர்களுக்கான பணிவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேசமயத்தில், நியூசிலாந்து மத்திய வங்கியானது எதிர்காலப் பணமதிப்பீட்டாளர்கள் பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த ஆட்களைக் கோரியுள்ளது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வருங்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள சவால்களை சந்திக்கும் வகையிலேயே இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடிக்கு முன்னதாகவே, உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு பருவநிலை மாறுபாடு என்பது சவாலானதாக இருந்தது. பல மத்திய வங்கியாளர்கள், பருவநிலை மாறுபாடு தொடர்பான உரைகளையும் வழங்கி வருகிறார்கள்.
அதேசமயம், நாடுகளின் மத்திய வங்கிகள், பருவநிலை மாறுபாடு தொடர்பான விஷயங்களை கையாளக்கூடாது என்றும், அத்துறையை வேறு நிபுணர்களின் பொறுப்பில் விட்டுவிட வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.
மத்திய வங்கிகள், விலை மற்றும் நிதிசார் நிலைத்தன்மை ஆகிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென்றும், பருவநிலை மாறுபாடு தொடர்பான அம்சங்கள், வங்கிகளின் நோக்கத்தை திசைதிருப்பிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் அவர்கள்.
பொதுவாக, மத்திய வங்கிகள் உலகளாவிய நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுகின்றன. எனவே, அவை எதிர்கால அபாயங்கள் குறித்தும் திட்டமிட வேண்டியுள்ளது. உலகளாவிய நோய்த் தொற்று, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பது குறித்து சிறிய சந்தேகம் உள்ளது பலருக்கும்.
ஆனால், உடல் அளவிலான சேதாரம், பொருளாதார சேதத்தை கட்டாயம் உண்டாக்கும் மற்றும் மாற்றுதல் தொடர்பான அபாயங்கள் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கியப் பயணத்தில் மாறுதல்களை உண்டாக்குகிறது.
இந்த இரண்டு அபாயங்களும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க சேதாரங்களை உண்டாக்குகின்றன. அதேசமயம், இந்த அதிர்வானது உலகளாவிய நோய் பரவல் என்ற வகையில், பெரிதான ஒன்றாக இருந்தால், அது ஒவ்வொரு குடிமகனும் உணரக்கூடியதாக இருக்கும்.
மத்திய வங்கியியல் பணிகளில் முன்னோடியான நியூசிலாந்தின் மத்திய வங்கி, எதிர்கால பண மதிப்பீட்டாளர் பணிக்கான ஆட்களைக் கோரியுள்ளதானது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இந்தப் புதிய பணியானது, நேரடி பணத்தின் ஒட்டுமொத்தப் புழக்க நடவடிக்கைகளையும் கையாள்வதாகும்.
இதன்மூலம் எதிர்காலத்தில், ஆன்லைனில் நிகழும் டிஜிட்டல் பணப்புழக்கம் தொடர்பான மேலாண்மை கொள்கையையும் உருவாக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது, பணப் பரிமாற்றத்தில் புதிய வழிகளைக் கண்டறிவது மட்டுமல்ல, நுகர்வோரின் நடத்தையிலும் மாற்றங்களை உண்டாக்கும் என்று தெரிவித்துள்ளது நியூசிலாந்தின் மத்திய வங்கி.
பருவநிலை மாற்றத்துடன் ஒப்பிடுகையில், பணம் செலுத்தல் நடவடிக்கைகளின் டிஜிட்டல் மயம் என்பது மத்திய வங்கிகளுக்கு சவால் குறைந்த அம்சம் என்று கூறப்படுகிறது.
உலகளாவிய மாற்றங்கள் இவ்வாறு நடந்துவரும் வேளையில், இந்திய ரிசர்வ் வங்கியும், மேற்கண்ட புதிய பணிநிலைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்துதலை இந்திய ரிசர்வ் வங்கி ஊக்குவிப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், டிஜிட்டல் பணம் தொடர்பான அடுத்தக்கட்ட சவாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
ஏனெனில், இந்தியாவில் பருவநிலை மாறுதல் என்பது ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும் அம்சமாய் மாறி வருகிறது. உணவுப் பணவீக்கத்தின் மீதும், மின்சாரத் தேவை, வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளிட்ட காரணிகள் மீதும் இது தாக்கம் செலுத்துகிறது.
உலகின் சில மத்திய வங்கிகள், கொரோனா தொற்றையும் தாண்டி சிந்திப்பது உற்சாகம் அளிக்கக்கூடியதாய் உள்ளது. பருவநிலை மாற்றம் புதிய சவாலாக இருக்கும் நிலையில், டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை புதிய வாய்ப்பாக மடைமாற்றுவதிலும் சவால்கள் உள்ள நிலையில், எதிர்கால பணமதிப்பீட்டாளர் மற்றும் பருவநிலை பொருளாதார வல்லுநர் என்ற இந்த இரண்டு பணியிடங்கள் குறித்து ஆய்வுசெய்ய, வலுவான வல்லுநர் குழுக்களை அமைக்க வேண்டும்.
நியூசிலாந்து மற்றும் டென்மார்க் நாட்டு மத்திய வங்கிகளின் வழித்தடத்தை, மற்ற நாட்டு மத்திய வங்கிகளும் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றுள்ளார்.