சென்னை:
நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம் உட்பட 13 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்களை தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்டம் – திருப்பூரில் 75 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்;
தஞ்சாவூர் மாவட்டம் – திருமலை சமுத்திரத்தில், 10 கோடியே 39 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;
விழுப்புரம் மாவட்டம் – சிட்டம்பூண்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 24 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு தரம் உயர்த்தப்பட்ட 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்;
காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 7 கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாச்சார அறிமுகம்);
சேலம் மாவட்டம் – பேளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – அரசடி ஆகிய இடங்களில் 19 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்;
செங்கல்பட்டு மாவட்டம் – இந்தளூர், கோயம்புத்தூர் மாவட்டம் – பந்தய சாலை மற்றும் பட்டணம் ஆகிய இடங்களில் 72 கோடியே 36 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்;
நாகப்பட்டினம் மாவட்டம் – கிடாரங்கொண்டானில் 4 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு தரம் உயர்த்தப்பட்ட 110/11 கி.வோ. துணை மின் நிலையம்;
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் – கேப் ஆகிய இடங்களில் 9 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு உள்ளக 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; என மொத்தம் 235 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, தலைமைச் செயலாளர் க. சண்முகம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஆ.கார்த்திக், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.