இஸ்லாமாபாத்
சாரை சாரையாக படையெடுத்து பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகளை பாகிஸ்தான் விவசாயிகள் பிடித்து கோழித் தீவனமாக்கி வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லாகஸ்டா எனப்படும் வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கடும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ள வெட்டுக்கிளிகள் மேற்கு மற்றும் வட இந்திய மாநிலங்களில் பயிர்களுக்குப் பேரழிவு அளித்து வருகிறது.
வெட்டுக்கிளிகளை அழிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயினும் அவற்றை முழுமையாக அழிக்க முடியாமல் பல நாடுகளும் தவித்து வருகின்றன. பாகிஸ்தான் விவசாயிகள் வெட்டுக்கிளிகள் பிரச்சினையை வேறு ஒரு விதமாகக் கையாண்டு அதன்மூலம் லாபம் ஈட்டத் தொடங்கி உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் ஓகாரா மாகாணத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி முகமது குர்ஷித் யோசனைப்படி இவர்கள் வெட்டுக்கிளிகளை வலையை வைத்து ஏராளமாகப் பிடித்து அவற்றைக் கோழித் தீவன ஆலைகளுக்கு விற்கின்றனர். அந்த ஆலைகளில் வெட்டுக்கிளிகள் அரைக்கப்பட்டு அவை கோழித்தீவனமாக பாகிஸ்தானில் விற்கப்படுகிறது.
ஏராளமான புரதச் சத்து உள்ள வெட்டுக்கிளிகள் தீவனம் கோழிகளுக்கு மிகவும் ஆரோக்கிய தீவனம் எனக் கூறப்படுகிறது.