
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த 1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் மற்றும் 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் முக்கிய விளையாட்டு நட்சத்திரமாக ஆகியுள்ளார் டிங்கோ சிங்.
புற்றுநோய் சிகிச்சைக்காக இவர், மணிப்பூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டார். பின்னர், ரேடியோதெரபி சிகிச்சை முடிந்தவுடன், இவர் சாலை வழியாக மணிப்பூர் சென்றடைந்தார். இவர் மொத்தமாக 2400 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அக்கறை எடுத்து செய்யுமாறு, மணிப்பூர் மாநில அரசை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டுள்ளார்.
இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக, இவரின் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel