கொல்கத்தா: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தப் பிறகு, கிரிக்கெட் உட்பட, உலகின் பலவும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்புவதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியதில், உலகிலேயே அதிகம் கவலைப்பட்ட மனிதர்களின் கங்குலி முக்கியமானவர் எனலாம்! ஏனெனில், பிசிசிஐ தலைவராக, ஐபிஎல் உள்ளிட்ட பல தொடர்கள் குறித்து பெரிதாக ‘பிளான்’ செய்தவர். ஆனால், எல்லாமே சோதனையில் முடிந்துவிட்டது.
இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “கொரோனாவால் தற்போது உலகமே முடங்கியுள்ளது. அடுத்த 6 முதல் 7 மாதங்களில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், அனைத்தும் சகஜ நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்.
அப்போது கிரிக்கெட்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். தற்போது பிசிசிஐ – ஐசிசி இணைந்து செயல்பட்டு வருகிறது. கிரிக்கெட் அட்டவைணையில் சில மாற்றங்கள் இருக்கலாம். வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.
தற்போதைய சூழலுக்குத்தான் இப்படியே ஒழிய, மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் அனைத்தும் மாறிவிடும்” என்றுள்ளார் சவுரவ் கங்குலி.