உலகிலேயே அதிக அளவில், அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் “ஸீரம்” நிறுவனம், பல்வேறு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் பணியாற்றி வருகிறது. “ஸீரம்” நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், போலியோ முதல் அம்மை வரை 1.5 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்கிறது.
இப்போதைய சூழ்நிலையில், COVID-19-க்கான தடுப்பு மருந்தை உலக நாடுகள் பெறவேண்டுமென்றால், அது “ஸீரம்” இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி வருகிறது. உலகிலேயே அதிக அளவிலான முக்கிய தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் “ஸீரம்” நிறுவனம், புதிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக, உலக அளவில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற, அஸ்ட்ராஜெனிகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான தடுப்பு மருந்தை பெருமளவில் உற்பத்தி செய்யவுள்ளது. மேலும் அதன் சொந்த கண்டுபிடிப்புகளும் உண்டு. இந்த முயற்சிகள் அனைத்தும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரான உமேஷ் ஷாலிகிராமால் மேர்பார்வையிடப்பட்டு வருகிறது. அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும், நள்ளிரவுக்கு சற்று முன்னதாக, அரசாங்கத்திடமிருந்து அன்றைய முன்னேற்றத்தினைப பற்றியும், எதிர்கொண்ட சிக்கல்களைப் பற்றியும் கேட்டு ஒரு வாட்ஸ்அப் செய்தியைப் பெறுகிறார். இந்த செய்தி வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடியின் உயர்மட்ட விஞ்ஞான ஆலோசகரான கே. விஜயராகவனிடமிருந்து வருகிறது.
இது உலகம் முழுவதும் நிலவும் நெருக்கடி, தடுப்பு மருந்து கண்டறியப்படுவதன் முக்கியத்துவம் மற்றும் உலகம் முழுவதும் தடுப்பு மருந்து கண்டறிவதில் நிலவும் போட்டி எனப் பலவற்றையும் நமக்கு உணர்த்துவதாக உள்ளது. திரு. ஷாலிகிராம் உடனடியாக அன்றைய முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகள் குறித்த அறிக்கையுடன் பதிலளிக்கிறார். ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டால், நீங்கள் அவர்களிடம் கோரினால் போதுமானது என்கிறார். தடுப்பு மருந்து கண்டறிவதில் அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. பொதுவாக 4 முதல் 6 மாதங்கள் வரை எடுக்கும் இறக்குமதி சிக்கல்கள், அனுமதி தாமதங்கள் என அனைத்தும் சில நாட்களில், அதுவும் சில சமயங்களில் ஞாயிறு மாலைக்கூட தீர்க்கப்படுவதை சுட்டிக் காட்டினார்.
தடுப்பு மருந்துகளைப் பற்றிய பெரும்பாலானோரின் கவனம் பொதுவாக மருந்து உருவாக்குனரிடம் இருக்கும் என்றாலும், இந்தியாவின் “ஸீரம்” நிறுவனம் 60% -70% சதவிகித அளவிலான உற்பத்தியை செய்வதின் மூலம் அமைதியாக ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். புனேவில் உள்ள இந்த நிறுவனத்தின் 150 ஏக்கர் பரந்த வளாகத்தில், ஷாலிகிராம் மற்றும் அவரது குழுவினர் முழுநேரம் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் டஜன் கணக்கான பேருந்துகளில் வேலைக்கு வருகின்றனர். சுற்றியுள்ள நகரம் முடக்கப்பட்டிருந்தாலும், இந்த நிறுவனம் செயல்பாட்டு வருகிறது. உலகளவிலும், உள்நாட்டிலும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலக தலைவர்கள் தடுப்பு மருந்துகளை தங்களது முடங்கியுள்ள பொருளாதாரங்களை மீட்டெடுக்கும் ஒரே உண்மையான வழியாக பார்க்கிறார்கள். ஆனால் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பை சொந்தமாகக் கொண்ட பூனவல்லா, விஞ்ஞானிகள், மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஈடு இணையற்ற அளவில் ஒத்துழைத்து, வளர்ச்சி மற்றும் மருந்தின் இருப்பை உறுதி செய்கின்றனர் என்றார். “இங்கு யாரும் தலைவர் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து இந்த நோயை எதிர்த்துப் போராடுவோம் என்றார்.
தடுப்பு மருந்துகள்
1966 ஆம் ஆண்டில், ஆதாரின் தந்தை சைரஸ் பூனவல்லாவால் நிறுவப்பட்ட “ஸீரம்”, நிறுவனம், இன்னும் தயாரிப்பில் இருக்கும் மூன்று விதமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய, யு.எஸ். பயோடெக் நிறுவனமான கோடஜெனிக்ஸ், அதன் யு.எஸ். போட்டி நிறுவனமான நோவாவாக்ஸ் மற்றும் ஆஸ்திரிய நிறுவனமான தெமிஸ் ஆகியவற்றுடன் பங்குதாரராக இணைந்துள்ளது. மேலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தினால் கண்டறிப்பட்டு, மனித சோதனையில் உள்ள, மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ள, தடுப்பு மருந்தையும் பெருமளவில் உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள சாத்தியமான தடுப்பு மருந்தின் மூன்றில் ஒருபகுதியை அமெரிக்காபெறவுள்ளது. ஆரம்பத்தில் ChAdOx1 என்று அழைக்கப்பட்ட இந்த மருந்து தற்போது AZD1222 என்றும் அழைக்கப்படுகிறது. இதற்காக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பூனவல்லா, தனது நிறுவனத்தின் மூலம், ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்கு 4-5 மில்லியன் டோஸ்களை ஜூன் மாதவாக்கில் தொடங்கி, பின்னர் படிப்படியாக ஆண்டுக்கு 350-400 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். “சோதனைகள் முடிவடைந்ததும், அக்டோபர்-நவம்பர் வரையில் உலகெங்கிலும் உள்ள நம் நாட்டிற்கும் பிற ஆபத்தான பகுதிகளுக்கும் கொடுக்க சில மில்லியன் டோஸ் பங்குகளை நாங்கள் உருவாக்குவோம் என்று நம்புகிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து உபயோகித்து சோதித்தறிதலை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும், இது வெற்றி பெற 80% வாய்ப்பு இருப்பதையும் புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு மேம்பாட்டுக் குழுவால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பூனவல்லா, AZD1222 ஒற்றை டோஸ் தடுப்பு மருந்தாக இருக்கும் என்றும், பூஸ்டர் டோஸ் தேவைப்படாது என்றும் எதிர்பார்ப்பதாக கூறினார். மேலும், AZD1222 – ன் ஒரு டோஸ் சுமார் 1,000 ரூபாய் ($ 13) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும், ஆனால், அது கட்டணமின்றி அரசாங்கங்களால் வாங்கப்பட்டு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும் கொரோனா நோயைச் சமாளிக்க “ஸீரம்” தனது சொந்த தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பூனவல்லா கூறினார்.
சேமிப்பு குப்பிகள் மற்றும் பரிசோதனை குழாய்கள்
ஒரு தடுப்பு மருந்து வெற்றிபெற்றாலும், COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சிகிச்சை இன்னும் தேவைப்படும் என்று பூனவல்லா கூறினார். ஒரு சிலருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டாலும் கூட, விரும்பிய நோயெதிர்ப்பு கிடைக்காமல் போகலாம். “நீங்கள் லேசான அறிகுறிகளை அல்லது கடுமையான அறிகுறிகளைப் பெறலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. ஆனால் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று அவர் கூறினார். “அனைத்து தடுப்பு மருந்துகளும் முழுமையாக பயனுள்ளதாக இருப்பது இல்லை” “ஸீரம்” நிறுவனம் போலியோ முதல் தட்டம்மை வரை அனைத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்கிறது. அனைத்து ஒப்புதல்களும் கிடைத்தவுடன், மொத்தமாக ஒரு தடுப்பு மருந்து தயாரிக்க தேவையான குப்பிகள் மற்றும் உயர்தர இரசாயனங்கள் வழங்குவதில் நிறுவனத்திற்கு ஒரு வரம்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
“எங்களுடைய மூலபொருள் வழங்குனர்களுடன் நாங்கள் ஒப்பந்தமிட்டுள்ளோம். இதன்படி, ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான, கண்ணாடி குப்பிகளை மற்றும் கண்ணாடி குழாய்களை முன்கூட்டியே சேமித்து வைத்திருக்கிறோம், எனவே அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்காது.” என்றார். எந்தவொரு வெற்றிகரமான தடுப்பு மருந்தும் விநியோகரீதியாக முதலில் குறைவாகவே இருக்கும்” என்று அவர் கூறினார். இந்தியாவில், கடந்த வெள்ளிக்கிழமை 6,000-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதனால், இதன் மொத்த எண்ணிக்கை 118,000-க்கும் அதிகமாகி, சுமார் 3,500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். எனவே, நாட்டில் எந்தவொரு தடுப்பு மருந்தின் சோதனைகளின் செலவுகளையும் ஈடுகட்ட இந்திய அரசு தயாராக உள்ளது. பூனவல்லா மேலும் கூறுகையில், தடுப்பு மருந்துக்கு முன்கூட்டியே உத்தரவுகளை வழங்குவதில் அரசாங்கமும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. “நாங்கள் கிட்டத்தட்ட மருந்தை அடைந்துவிட்டோம். அவைகள் வேலை செய்கின்றன” என்றும், “எங்களால் தேவையான அளவில் மருந்துகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்பிக்கை பெறும்வரை, அரசாங்க பணத்தை எடுக்க விரும்பவில்லை.” என்றும் கூறினார்.
சுகாதார நெருக்கடியின் போது, அதிக அளவில் பணி நியமனம் செய்த நிறுவனங்களில் “ஸீரம்”, நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது உலக அளவிலான அதிதீவிரப பரவல் காலங்களில் திறனுடன் செயல்படும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு சோதனைச் சாலையை வடிவமைத்து வருகிறது. இந்த சோதனை சாலை, COVID மட்டுமின்றி, எந்த ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டாலும், ஆண்டுக்கு 700-800 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை தயாரிக்கும் வகையில் இருக்கும். இது உலகின் மொத்த தேவையில் கிட்டத்தட்ட 90% ஆகும். இந்த சோதனை சாலை முழுமையாக தயாராக இன்னும் 2-3 வருடங்கள் ஆகலாம். சில ஆண்டுகளுக்கு முன், பெரும் அளவிலான நிதி திரட்டும் நோக்கில் இந்த நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட முடிவு செய்து எதனாலோ அந்த அத்திட்டத்தினை பின்னர் கைவிட்டு விட்டது. மீண்டும், சில் மாறுதல்களுடன் திட்டம் ஒன்றை வடிவமைத்து வருகின்றனர். அதன்படி, உற்பத்தி உரிமைகள், அறிவுசார் சொத்துக்கள் மற்றும் “ஸீரம்” COVID-19 தொடர்பான அனைத்து தடுப்பு மருந்துகளையும் விற்பனை செய்தல், மற்றும் ஏதேனும் சிக்கல் எனில் சிறு அளவிலான பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்ட நிறுவனத்தின் தேவைகளையும், சிக்கல்களையும் நிர்வகிக்கும் வகையில் நிறுவனத்தை உருவாக்குவது திட்டமிடலில் உள்ளது.
இது குறித்த ஆதாரங்களை சோதிக்க வங்கிகளைக் கேட்டுக் கொண்டதை பூனவல்லா சுட்டிக் காட்டினார். ஆனால், பெரிய லாபத்தை எதிர்பாராத, உலகிற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த” விரும்பும் கொள்கைகள் கொண்ட, நீண்ட கால நிதிகள் அல்லது இறையாண்மை நிதிகளுக்கு மட்டுமே தனது பங்குகளை விற்க விரும்புவதாக கூறினார். ஏனெனில், அவர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டபிறகு, அவர்களுக்கு இலாபம் வழங்க வேண்டி, மருந்துகளின் விலையை ஏற்றவேண்டிய அவசியத்திற்கு ஆளாக விரும்பவில்லை என்றார். இதன்படி பார்த்தால், உலக நாடுகளின் நிவாரணம் தற்போது இந்தியாவின் கையில் உள்ளது என்றாற்போல் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?
English: Abhirup Roy , Euan Rocha , Reuters
தமிழ்: லயா