பெண் சிசுக்கொலை.. நாடகமாடிய தாயும் பாட்டியும்
விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசு மருத்துவ ஊழியர்களின் தொடர்ந்த கண்காணிப்புகள், காவல்துறை நடவடிக்கைகள் என்று இத்தனை இருந்தும் இந்த பெண் சிசுக்கொலையை முற்றிலுமாக ஒழிக்கமுடியவில்லை.
சோழவந்தானில் கடந்த வியாழனன்று பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் சிசு ஒன்று கள்ளிப்பாலுக்கு இரையாகி தன் உயிரை இழந்துள்ளது.
தேவமணி-சித்ரா தம்பதியினருக்கு நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, தேவமணியும், அவரது தாயார் பாண்டியம்மாளும் சேர்ந்து கொஞ்சமும் இரக்கமின்றி நான்கு நாள் சிசுவுக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்து கொலை செய்துள்ளனர். இறந்த குழந்தையை அவசர அவசரமாக வைகை ஆற்றின் கரையிலேயே புதைத்துள்ளனர்.
முன்னதாக தேவமணி அப்பகுதி சுகாதார ஊழியரை போனில் அழைத்து குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகப் பதட்டத்துடன் கூறியதாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே திரும்பவும் அழைத்து மருத்துவமனை அழைத்துச்செல்லும் முன்னரே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஞாயிறு அன்று சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்யராஜ் அவர்களின் எடுத்த நடவடிக்கையால் குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி இருவரும் கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் எத்தனை பெண் சிசுக்கள் இவர்களைப் போன்ற இதயமற்ற அரக்கர்களின் கைகளில் சிக்கி உயிரிழக்க உள்ளனரோ. பெண் சிசுக்கொலைக்கு எதிராக இதற்கு மேலும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதே புதிராக உள்ளது.
– லெட்சுமி பிரியா