சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை பேட்டி எடுத்த நிகழ்ச்சி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் தந்தி டிவி நெறியாளர் ரங்கராரஜ் பாண்டே, நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 28.03.2015 அன்று தந்தி டிவி நெறியாளர் ரங்கராஜ்பாண்டே, கி.வீரமணியை பேட்டி கண்டார். அந்த நிகழ்ச்சியின்போது, “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை கொல்” என்று பெரியார் ஈ.வெ.ரா. கூறினார் என்பதாக பாண்டே கேள்வி எழுப்ப, அதை கி.வீரமணி மறுத்தார். இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த குமரவேலு பாண்டே மீது வழக்கு தொடர்ந்தார்.
நாம் குமரவேலுவிடம் இது குறித்து கேட்டபோது, “அந்த நிகழ்ச்சியிலேயே பாண்டேவின் கேள்விக்கு பதில் அளித்த கி.வீரமணி, “பாம்புவிட்டுவிட்டு பார்ப்பானை கொல்” என்று பெரியார் எப்போதும் பேசவில்லை என்று ஆதாரத்துடன் மறுத்தார்.
ஆனாலும் அந்த நிகழ்ச்சி முடிவில், அதே வார்த்தைகளை பெரியார் சொன்னதாக ஸ்லைடு போடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த நேரத்தில் இப்படி போடப்பட்டதால், அதில் கலந்துகொண்ட வீரமணி, மறுபடி விளக்கம் அளிக்க முடியவில்லை. தவிர, பெரியார் சொல்லாததை சொன்னதாக வரலாற்றை திரிப்பதும் தவறு. ஆகவே ரங்கராஜ் பாண்டே, அதே தந்தி டிவி மூலம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினோம்.
தான் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் பாண்டே பதில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பாண்டே வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறோம்” என்றார்.
குமரவேலு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பாண்டியனிடம் பேசினோம்,. அவர், “அந்த நிகழ்ச்சி குறித்தான வழக்கில் தந்தி டிவி நெறியாளர் ரங்கராஜ் பாண்டே வரும் மார்ச் 1ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (ஜே.எம். 1) சம்மன் அனுப்பியிருக்கிறது” என்றார்.
தந்தி டிவி இயக்குநரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.