hqdefault
ல நாட்களாக எதிர்பார்த்த விசயம், நேற்று நடந்திருக்கிறது.  “ஆளும் தரப்பினர் கமிசன் வாங்குகிறார்கள், மக்களை மதிப்பதில்லை..” என்றெல்லாம் அதிரடியாக சமீபகாலமாக பேசி வந்த அ.தி.மு.க பிரமுகர் துறைமுகம் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா (ஒருவழியாக!) கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் துக்ளக் வார இதழ் விழாவில், இவர் பேசியதுதான் நீக்கத்துக்கான உடனடி காரணம் என்கிறார்கள்.
இன்று காலை பழ. கருப்பையாவை தொடர்புகொண்டு பேசியபோது, மதியம் 12 மணிக்கு தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாக தெரிவித்தார்.
அந்த சந்திப்பின்போது, “நான், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் பழகியவன்” என்று ஆரம்பித்தவர், “விளைவுகளை பற்றியும் கவலைப்படாமல் முடிவெடுப்பது ஜெயலலிதாதான். அவரிடம் எனக்கு பிடித்த குணமும் அதுதான். ஆனால் ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடும் அளவுக்கு அமைச்சர்களே போய்விட்ட பிறகு, நாம் என்ன செய்வது என்று நெடுங்காலமாக யோசித்துக்கொண்டு இருந்தேன்.
ஜெயலலிதா திறமைசாலிதான்  கட்சியிலுள்ள எல்லா மனிதர்களும் அவர்கள் போக்கிற்கு நடந்துகொள்ள அனுமதியளிக்கிறது. அதேநேரம், ஆசையின் மீது அச்சத்தை வைத்து ஜெயலலிதா கட்சியை நடத்திவிட்டார். அவர் பார்த்தாலே எல்லோரும் பயப்படும் அளவில்தான் கட்சியை வைத்துள்ளார். அதுவொரு பெரும் திறமைதான் என்றார் சிரித்தபடியே.
தொடர்ந்து, “கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி எனக்கு வியப்பை அளித்தது. விலக்கப்படுகின்ற அளவுக்கு நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றே நம்புகிறேன்.  எனக்கும், கட்சியின் தலைமைக்கும் சிறு இடைவெளி இருந்தது. அது பற்றி ஜனநாயகத்தில் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் காமராஜர் மீது பற்று கொண்டு, அவரைப் பின்பற்றி நடப்பவன். ஒருவேளை, இதுவே என் மீதான நடவடிக்கைக்கு காரணமாக இருக்குமோ என்னவோ..!
நான் ‘துக்ளக்’ விழாவில் பொதுவான அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய பேச்சு காரணமாகவே கட்சியில் இருந்து என்னை நீக்கியிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.  கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக அரசு எப்படி செயல்படுகிறது, நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்கிறேன். அது பற்றித்தான் பொதுவாக பேசினேன். அதற்காக நீக்கியிருக்கிறார்கள்.
என் தரப்பு நியாங்களைச் சொல்லி, கட்சித் தலைமையிடம் நான் சமாதானம் பேசப்போவது இல்லை. அவர்கள் கட்சி நடத்தும் பாங்கு என்பது வேறு. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அனுபவம் கருதியும், ஈடுபாடு கருதியும் என்னை அழைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போது பேசியது உண்டு.  ஆனால், ஆளும் கட்சியாக ஆன பிறகு, அவரை என்னால் நெருங்க முடியவில்லை. எனினும், அவர் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை.
என் அனுபவத்தையும் கருத்துகளையும் சுதந்திரமாகச் சொல்வதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் சட்டமன்றத்தில் இடம் இல்லை.  ஆளும் கட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் பேச வாய்ப்பும் கிடையாது.  ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் கூட பேச அனுமதிக்காதது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், கட்சியின் தலைமையை நேரடியாக சந்தித்து என் பிரச்சினைகளைச் சொல்ல பல முறை முயற்சி செய்தேன். முடியவில்லை.
ஆடு, மாடு மேய்ப்பது போல கட்சியில் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கு மதிப்பும் இருக்கிறது. இந்தப் போக்கை எந்தச் சூழலிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட பின்னணியில், என்னை கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்கிறேன். அதற்கு எதிர்வினையாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். சில காலம் இருந்தாலும் அந்தப் பதவியை வகிப்பது நெறி சார்ந்தது அல்ல. எம்.எல்.ஏ பதவிக்கு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம். அதற்காக அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. நான் மக்களுக்குத்தான் பதிலளிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைப்பேன். ஆனாலும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.
எனவே, நான் நீக்கப்பட்ட இந்தத் தருணத்தில் என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதுகுறித்து பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன்” என்றவர்,(ராஜினாமா கடித்ததின் நகலை பத்திரிகையாளர்களிடம் ண்பித்தார்.
பிறகு,” நான் மனபூர்வமாக ராஜினாமா செய்கிறேன் என்று அந்தகடிதத்தில் கைப்பட எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்கச் சென்றால், அவர் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள எவரிடமும் நேரடியாக கொடுக்க முடியவில்லை. எனவே, என் ராஜினாமாவை இங்கு அறிவிக்கிறேன்” என்றார் பழ.கருப்பையா.
அதன் பிறகு மீண்டும், இந்த ஆட்சியின் ஊழல் குறித்து பேச ஆரம்பித்தார்:
“இந்த ஆட்சியில் கழிவுநீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சம் தந்தாக வேண்டிய அவல நிலை. கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் – ஊழல் பெருகிவிட்டது. அதிகாரிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.  இந்தப் போக்கு சரியானது அல்ல.
தமிழகத்தில் மதுவிலக்கு என்பது அவசியம். ஏழைகளின் பணத்தை வாங்கி, அவர்களுக்கு இலவசம் வழங்குவது நியாயம் கிடையாது.
பான்பராக் தடை செய்யப்பட்ட பொருள். அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அந்த பான்பராக் அதிகம் புழங்குவது என் துறைமுகம் தொகுதிதான். ஆனால், எல்லா மட்டத்திலும் போராடி முயற்சி செய்தும் தடை செய்ய முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக நான் தோற்றுப்போனேன். என் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்”என்றவர், எதிர்கால திட்டம் பற்றி அடுத்ததாக கூறினார்.
“எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், எனது அரசியல் முடிந்துவிடாது. நான் அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன்.” என்று முடித்தார் பழ. கருப்பையா.
இவர் இன்று பேசியதில் மிக முக்கியமான விசயம், “என்னை தேர்ந்தெடுத்த துறைமுகம் தொகுதி மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.  அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்பதுதான்.
கிட்டதட்ட ஐந்தாண்டுகள் முழுதுமாக எம்.எல்.ஏ. பதவி வகித்துவிட்டார் பழ. கருப்பையா என்றுதான் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு  இன்னும் மூன்று மாதங்கள்தானே இருக்கின்றன?
இந்த நிலையில், பழ. கருப்பையாவின் ராஜினாமாவை  தொகுதி மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
நாளை அது குறித்து பார்ப்போம்…!