“உங்கள் தூங்கும் நேரத்தில் ஏதாவது மாற்றங்களை உணர்கிறீர்களா நீங்கள்?” என்று நம்மை நோக்கி கேள்வியினை நீட்டுகின்றனர் மருத்துவர்கள்.

பெரும்பாலானோர் தங்களின் தூக்க நேரங்களில் எற்பட்டுள்ள மாறுபாடுகளால் குழம்பி நிற்கின்றனர். உடல் ரீதியிலான உழைப்பு ஏதும் இல்லாமை, தினசரி நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாறுதல்கள், வீட்டிலிருந்தே பணி செய்வதால் அலுவலக பணி தீவிரம் குறைவு, சமூக வலை தளங்களில் அதிக நேரம் செலவழித்தல், இந்த கொரோனா பற்றிய செய்திகளை திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருப்பதால் உண்டாகும் மன, பண ரீதியிலான உளைச்சல், இவைகளே இந்த தூக்க நேர மாறுபாடுகளுக்கான பிரதானமான காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

“இந்த ஊரடங்கிற்கு பின் வேலை பளு ஏதுமில்லாததால் எனக்கு சோர்வு என்பதோ, தூக்க கலக்கமோ ஏற்படவேயில்லை. இதனால் தொடர்ந்து ஆன்லைனில் சினிமாக்கள் பார்க்க ஆரம்பித்தேன். இப்போதோ நான் சூரிய உதயத்திற்கு பிறகு தான் தூங்கவே செல்கிறேன். பிரண்ட்ஸ் கூட பேசின பிறகு தான் தெரிஞ்சது, அவங்களும் என்னைய போலவே லேட்டா தான் தூங்குறாங்கனு” என்கிறார் 26 வயது தொழில்முனைவர் கிலன் அரோரா.

டெல்லியை சேர்ந்த ஆதித்தி, “காலைல எட்டு மணிக்கி எழுந்து கிளம்பி 10 மணிக்கி ஆபீஸ் போயிடுவேன். ஆனா இப்போ வீட்லருந்தே ஒர்க் பண்றதால சமயத்தில மதியம் போல தான் எழுந்திருக்கவே செய்றேன்” என்கிறார்.

இந்த தூங்கும் நேர மாறுபாடு இப்படியே தொடருமேயானால் நாம் உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் மனநல மருத்துவர் ஊர்வசி. “நீங்க ஆறு மணி நேரமோ, பத்து மணி நேரமோ தூங்குறது முக்கியமில்லை. இந்த தூங்கும் நேரம் உங்களின் அன்றாட தினசரி நேரங்களிலிருந்து மாறக்கூடாது என்பது தான் முக்கியம். இல்லைன்னா, அதிகமான சோம்பேறித்தனம், தொடர்ந்து காபி, குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதால் உண்டாகும் டிஹைட்ரேசன், உற்பத்தித்திறன் குறைதல், மிக எளிதாக எரிச்சல் மற்றும் கோபமடைதல் போன்ற தீவிர உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளில் சிக்கிக்கொள்வீர்கள்” என்று எச்சரிக்கிறார் இவர்.

சத்தான உணவுகளை உண்பது, காபி போன்ற பானங்களை தவிர்ப்பது, தூங்க செல்வதற்கு முன் மூச்சுப்பயிற்சி செய்வது, தினமும் தவறாமல் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது, தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் மொபைல், டிவி போன்றவற்றை தவிர்ப்பது மற்றும் படுக்கையறையில் இனிமையான இசையை ஓட விடுதல், நறுமண ஊதுவர்த்தியினை ஏற்றி வைத்தல், இவைகளெல்லாம் நமது தூக்க நேர மாறுபாடுகளை தவிர்த்து அமைதியான, நிம்மதியான தூக்கத்தினை அளிக்க உதவுபவைகள் என்கிறார் இவர் மேலும்.

Wakefit எனும் நிறுவனம் சுமார் 1500 பேர்களிடம் மேற்கொண்ட ஒரு சர்வேயின் முடிவுகளை பாருங்கள்:

1) வீட்டிலிருந்தே வேலை என்னும் WFH 67% பேரின் தூக்க நேரத்தினை பாதித்துள்ளது.
2) ஊரடங்கிற்கு பிறகு 40% பேருக்கு மேல் இரவில் வெகு தாமதமாக தூங்க செல்கின்றனர்.
3) 49% பேர் இந்த கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பணி பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்னைகளால் தூக்கமின்றி தவிக்கின்றனர்
4) இந்த ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகே தங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் 80% மக்கள்.

என்று அந்த திருநாளோ என்பது தெரியாமல் தவித்துக்கிடக்கிறோம் தினமும் நாம். ஆனாலும் இப்போதைக்கு மருந்துவர்களின் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றுவது ஒன்று தான் நமக்கு இருக்கும் ஒரே தேர்வு.

-லட்சுமி பிரியா