ஒரு நாள் ஒரு இளைஞன் மிகவும் சோகமாக புத்தரிடம் வந்தான். புத்தர் அவனை கண்டதும் ‘என்ன நடந்தது? ‘ என்று வினவினார்.
‘ஐயா, நேற்று என் தந்தை இறந்து விட்டார். தங்களை போன்ற பெரிய மனிதர் என் தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்தால், அவர் ஆன்மா சாந்தி அதைவது மட்டுமல்லாமல் சொர்க்கத்திலும் அவர் என்றும் நிலை பெறுவார். தயை கூர்ந்து இக்காரியத்தை எனக்காகச் செய்யுங்கள்” என்றான். அவன் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு பேசியதைக் கண்டார் புத்தர். இந்நிலையில் அவனுக்கு ஏதேனும் சொல்லி ஆறுதல் கூற முடியாதென, கடைக்கு சென்று இரண்டு மண் பாத்திரங்கள் வாங்கி வரச் சொன்னார்.
அவனும் தன் வேண்டுதலை புத்தர் நிறைவேற்ற ஆயத்தமாகி விட்டார் என எண்ணி கடைக்குச் சென்று இரு மண் பாத்திரங்கள் வாங்கி வந்தான். புத்தர் அந்த இளைஞனை, ஒரு பாத்திரத்தில் வெண்ணையையும் மற்றொரு பாத்திரத்தில் கூழாங் கற்களையும் வைத்து மூடி குளத்தில் எரியச் சொன்னார். அடுத்த வினாடி, ஒரு கம்பைக் கொண்டு இரு பாத்திரங்களையும் உடைக்கச்சொன்னார். முதல் பாத்திரத்தை உடைத்த உடனே பானையில் இருந்த வெண்ணை குளத்தின் மேலே மிதக்கத் தொடங்கியது, மற்றொரு பானையில் இருந்த கூழாங் கற்கள் குளத்தின் அடியில் செல்லத் தொடங்கியது.
புத்தர் அவனைப் பார்த்து, “நான் செய்ய வேண்டியதைச் செய்தாகிவிட்டது. இப்பொழுது உனக்கு தெரிந்த பண்டிதர்களை அழைத்து இறைவனை தொழுது “மூழ்கிய கற்களை மிதக்கவும், மிதக்கும் வெண்ணையை மூழ்கவும் செய்” என்றார்.
இதை கேட்ட இளைஞன், “ஐயா, அது எப்படிச் சாத்தியமாகும்? அது இயற்கைக்கு எதிரானதாகுமே” என்றான். புத்தர் மிக அமைதியாக, “இளைஞனே, அதைப்போலவேதான் மனிதன் இறந்த பிறகு எங்கு செல்கிறான் என்பது அவன் வாழும் பொழுது செய்யும் காரியங்களை பொருத்தது. அவன் இறந்த பிறகு அவனுக்காக மற்றவர்கள் செய்யும் காரியங்களினால் அல்ல” என்றார்.
இதையே பல நூற்றாண்டிற்கு முன்பு திருவள்ளுவர் “தக்கார் தகவுஇலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” என்றார்.
-ஆதித்யா