நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், இரவு பகல் பாராது, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு, தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், அவர்கள்மீது பலர் வன்மத்தை கக்கும் வகையில் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றனர். எச்சில் துப்புகின்றனர். தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹர்குலசின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய சம்பவம், மருத்துவர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்கள், நாங்கள் இல்லையென்றால் உங்கள் எதி என்ன என்பதை ஒருநிமிடம் யோசிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு 48 மணி நேரத்தில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
இன்று இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது கண்டனத்தையும் தெரிவிக்கின்றனர்.