பியாங்யாங்: வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரிய நாட்டை நிறுவியவரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்த நாள் விழாவில் (ஏப்ரல் 15) முதன்முறையாக கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை என்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
அதிகளவு புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் வேலைப்பளு காரணமாக அவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேசமயம், கிம் உடல்நிலை குறித்த தகவல்கள் நம்பகமானவைதான் என்றும், ஆனால், அதன் தீவிரத்தன்மையை கணிப்பது கடினம் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சீனா மற்றும் தென்கொரிய நாடுகளும் சந்தேகத்துடன் நோக்குகின்றன. தன் நாட்டில் கொரோனா பாதிப்பு கிடையாது என்று கிம் ஜாங் உன் வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.