சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் உயிர்க்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், தமிழக அரசு உங்களுக்கு துணையாக இருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

கொரேனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். ஆனால், கொரோனா தொற்று சோதனை செய்யும் இடத்தில் அல்லது அவர்களை மீட்டு வரும் போது பல இடங்களில் அவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுகிறது. அதுபோல,  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதால், அவர்கள் துரதிருஷ்டவச மாக மரணம் அடைந்தாலோ, அவர்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. இது மருத்துவர்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மருத்துவர்கள், களப்பணியாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், தமிழக அரசு உங்கள் பக்கம் நிற்கும் என்று கூறியிருப்பவர், உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

னித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினைச் சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மருத்துவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள்

எனவே, களத்தில் முன்னின்று பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். இவர்களது பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கின்றது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தன்னலம் கருதாமல், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரைத் துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு நாங்கள்  துணை நிற்போம்

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும், மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், அம்மாவின் அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும் என்பதையும் இத்தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.