பெரம்பூர்:
கொடுங்கையூர் டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், கட்டிடப் பணியாளர்கள் என 100 பேருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அமைப்புசாரா பணியாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
அவர்களின் அவசர உணவுத் தேவையை கருத்தில்கொண்டு, மூலக்கடை, டீச்சர்ஸ்காலனி, காந்திநகர், எம்ஆர்நகர் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், கட்டிடப்பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என தகுந்த நபர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்களான 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் கொடுங்கையூர் டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இன்று வழங்கப்பட்டது.
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்து, சமூக விலகலை கடைபிடித்து, அவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் சங்கத்தலைவர் அந்தோணி ராஜ் (35வது வட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர்), செயலாளர் அன்சர் பாஷா, பொருளாளர் கமலக்கண்ணன் உள்பட நிர்வாகிகள் செய்தனர்.
கொரோனாவால் பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஏற்கனவே 3000 பேருக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் கைகழுவுவதற்கான சோப்புகள் மற்றும், உணவுப்பொட்டலங்கள், கபசுரக் குடிநீர் போன்றவைகள் டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.