கவுகாத்தி
அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
நாட்டில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களில் ராஜநாகமும் ஒன்றாகும். இதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்துக்கு ஜாமீன் கிடையாது. இந்த அரிய வகை ராஜநாகங்கள் அருணாசலப் பிரதேசத்தில் அதிக அளவில் உள்ளன. இதைத் தவிர வேறு பல இன பாம்புகளும் இந்த மாநிலத்தில் உள்ளன.
சமீபத்தில் 12 அடி நீளமுள்ள ஒரு ராஜநாகத்துடன் எடுத்துக் கொண்ட வீடியோவை சில வேட்டைக்காரர்கள் வெளியிட்டிருந்தனர். அந்த பாம்பை இவர்கள் தோளின் மீது போட்டு இருந்தனர். அதன் பிறகு அவர்கள் இதை கொன்றுள்ளனர். ஒரு வாழையிலையைப் பரப்பி அதில் ராஜநாகத்தின் மாமிசத்தைச் சுத்தம் செய்து விருந்து செய்து உண்டுள்ளனர்.
கொரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்களின் வீடுகளில் ஒரு மணி அரிசி கூட இல்லாததால் இந்த பாம்பை வேட்டையாடியதாக அதில் ஒருவர் தெரிவித்திருந்தார். சட்டப்படி ராஜநாகத்தை வேட்டையாடுவது ஜாமீனில் வர முடியாத குற்றம் என்பதால் இவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதை அறிந்த வேட்டைக்காரர்கள் தலைமறைவாகி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.