டெல்லி:
இந்தியர்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக வெளிப்படுவதை சிறப்பிக்கும் விதமாக, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய மூவர்ணக்கொடி மின்னொளி வழியே காட்சி படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “உலகமே COVID-19 ஐ எதிர்த்து போரிட்டு வருகிறது. இந்த மாபெரும் தொற்றுநோயை நம் மனித நேயத்தால் வெல்வோம்” என அதில் தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக்கு மனித இனம் அதிக அளவில் பலியாகி வரும் சூழலில், நாள்தோறும் நம்பிக்கை, அன்பு மற்றும் நல்லுணர்வுகளை மலையுச்சியில் மின்னொளியால் சுவிட்சர்லாந்து உலகிற்கு உணர்த்தி வருகிறது.
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலை உச்சியில் சுவிஸ் ஒளியியல் நிபுணரால் மார்ச் மாதம் முதல் இவ்வாறு நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டு வருகிறது.