டில்லி
மார்ச் 25 முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நேரத்திலும் இந்திய ரயில்வே 42 லட்சம் டன் உணவு தானியங்களை நாடெங்கும் கொண்டு சேர்த்துள்ளது.
கொரோனா தாக்குதல் இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு சென்ற மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. ஆனால் அத்தியாவசிய பொருட்களான உணவு தானியங்கள், காய்கறி உள்ளிட்டவற்றுக்கான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
கொரோனாவின் தாக்கம் குறையாததால் இந்த ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும் விளை பொருட்களான உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வே தனது சரக்கு போக்குவரத்தை நிறுத்தாமல் நடத்தி வந்தது. அத்துடன் உணவு தானியங்கள் கொள்முதல் பணிகளும் தொடர்ந்து வந்தன.
விவசாயத்துறை அமைச்சக உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களை ரயில்வே வேகன்களில் ஏற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அது மட்டுமின்றி பல அரசு துணை நிறுவனங்களும் இந்த பணிக்குத் தொடர்ந்து பங்களித்து வந்தன. இந்திய ரயில்வே ஊரடங்கு தொடங்கியது முதல் அழுகும் பொருட்களான பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் பால் பண்ணை பொருட்கள் போக்குவரத்துக்காக 65 சிறப்புத் தடங்களைக் கண்டறிந்து நாட்டில் இவற்றுக்குப் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொண்டது.
இந்த தடங்களில் செல்லும் ரயில்கள் பல இடங்களில் நின்று சென்றதால் வழியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைத்துள்ளன உணவு தானியங்கள் ஒரு வேகனில் சுமார் 58-60 டன்கள் எடுத்துச் செல்வது வழக்கமாகும். மார்ச் 25 முதல் ஏப்ரல் 17 வரை3601 வேகன் தானியங்கள் நாடெங்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 42 லட்சம் டன்கள் ஆகும். சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 23.1 லடம் டன்கள் மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டுள்ளன