சண்டிகர்: அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை என்று அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறி இருக்கிறார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு தற்போது 2வது ஊரடங்கை எதிர்கொண்டு இருக்கிறது. இந்த ஊரடங்கு வரும் 3ம் தேதியுடன் முடிகிறது. அதேநேரத்தில் சில குறிப்பிட்ட விதிமுறைகளுடன் பல தொழில்களுக்கு மத்திய அரசு வரும் 20ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது.

இந் நிலையில் மாநிலத்தில் உள்ள 2.8கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை என்று அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1000 கொரோனா சோதனைகள் நடத்தப்படுகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் சோதனை நடத்துகிறோம்.

ஒரு பரிசோதனையின் போது 5 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் 3 மாதிரிகள் போதும் என்று சொல்லி இருக்கின்றனர்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அரியானாவில் அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 8000 மக்களிடம் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. 6000 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.