சென்னை:
அடையாறு பத்மநாப நகர் பகுதியில் யாருமில்லாத காருக்குடியில் போடப்பட்ட 2 மாத பச்சிளம் ஆண்குழந்தைக்கு, காவல்துறையினர் கொரோனா குபேரன் என பெயர் சூட்டி உள்ளனர். அந்த குழந்தையை அங்கு வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன இந்தியாவில் குழந்தைக்காக மருத்துவமனைகளை தேடி ஓடும் தம்பதிகள் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலை யில், பிறந்த குழந்தையை அநாதையாக்கி தூக்கி வீசும் கொடுமைகளும் மற்றொருபுறம் அரங்கேறி வருகின்றன.
சம்பவத்தன்று அடையாறு பத்மநாபர் நகர் 5வது தெரு பகுதியில் பாதுகாவலர் ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு, சுற்றுமுற்றும் பார்த்துள்ளார். அப்போது அருகே இருந்த காருக்கு அருகே சத்தம் கேட்டதும், காருக்குள் இருந்துதான் அழுகிறதோ என எட்டிப்பார்த்தால், கார் பூட்டப்பட்டி ருந்தது. ஆனால் அழுகை சத்தம் தொடரவே, காருக்கு கீழே குனிந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு வெள்ளைத்துணியால் சுற்றப்பட்ட ஒரு பார்சல் இருந்த நிலையில், அதற்குள் இருந்து அழுகுரல் கேட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த வெள்ளைதுணி பார்சலை எடுத்து, பிரித்துபார்த்தபோது அதனுள் குழந்தை பசியால் துடித்துக்கொண்டிருந்தது.
அந்த குழந்தையின் தாய் யார் என்பது குறித்து அருகே விசாரித்த நிலையில், யாருக்கும் தெரியாது என்று பதில் வரவே, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விமலா, அழுது கொண்டிருந்த குழந்தையை, சமூக விலகரை கடைபிடித்து, கையில் கையுறை, மாஸ்க் ஆகியவற்றை அணிந்துகொண்டு கையில் எடுத்துள்ளனர். அப்போது, அந்த பிஞ்சு இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. அழுது கொண்டிருந்த அந்த குழந்தைக்கு புட்டிப்பால் ஊற்றி பசியாற்றினர்.
அந்த குழந்தையை பாதுகாப்புடன் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்த காவல்துறையினர், அந்த குழந்தைக்கு ‘கொரோனா குபேரன்’ என்றும் பெயரிட்டனர். பின்னர் குழந்தைகள் காப்பகத்துக்குத் தகவல் தெரிவித்து, குழந்தையை ஒப்படைத்தனர்.
இந்த குழந்தையுடன் ஒரு கடிதமும் இருந்தாக கூறப்படுகிறது. அந்த கடிதம் குழந்தையின் தாயால் எழுதப்பட்டதாக இருக்கலாம் நம்பப்படுகிறது. அதில், ”இக்குழந்தையை என்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வேலை சாப்பாட்டுக்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். அதனால் என் குழந்தையை இங்க விட்டுட்டு போறேன். யாராவது எடுத்து நல்லா பாத்துக்கோங்க. குழந்தை இல்லாதவர்களிடம் இவனை கொடுத்திடுங்க.. என்னை மன்னிச்சிடுங்க” என்று எழுதியுள்ளார்.
குழந்தையின் தாய் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருவதாக சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விமலா தெரிவித்தார்.
குழந்தையை தாயே விட்டுச் சென்றாரா அல்லது யாராவது கடத்திவந்து போட்டுச்சென்றனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.