கடலூர்:
கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், போதைக் காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் போதைக்கு அடிமையானவர்கள், கள்ளச்சாராயத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சிலர் கையில் கிடைக்கும் பொருட்களைக் குடித்து போதையேற்றியும், அதனால் சில உயரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடலூர் அருகில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர், தனது நண்பருடன் சேர்ந்த, அந்த பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை வாங்கி வந்து, அதன் மூலம் சாராயம் தயாரித்துள்ளனர். இதை அவர்களுடன் சேர்ந்து, மேலும் பலரும் குடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மெத்தனாலை குடித்த சந்திரகாசன் திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில், அவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஆனால் சிலமணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் மெத்தனாலை குடித்த து எழில்வாணன், மாயகிருஷ்ணன், ரவி போன்றவர்களும் ரத்த வாந்தியெடுக்கவே அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர், மாயகிருஷ்ணன் ஆகியோர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவருக்கு கண் பார்வை பறிபோய்விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.