புதுடெல்லி: மாநிலங்கள் இடையே வேளாண் பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறும் வகையில், 24 மணிநேர உதவி மையம் ஒன்றை மத்திய அரசு தொடங்குகிறது.
இன்று முதல்(ஏப்ரல் 15) இது செயல்பாட்டிற்கு வருகிறது. லாரி ஓட்டுநர்கள், வர்த்தகர்கள், சில்லறை வணிகர்கள் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும்போது தடை ஏற்பட்டால், இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.
நாடு முழுவதும் குளிர்கால அறுவடைகளை முடித்துவிட்டு, கோடைகால விதைப்புக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தற்போது அறுவடை செய்யப்பட்டிருக்கும் பொருட்களை விநியோகம் செய்வது மிகவும் அவசர தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது.
இல்லையென்றால், மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும். ஊரடங்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக காய்கறி, உணவு தானியங்கள் மற்றும் இதர அத்திவாசிய பொருட்களை கொண்டு செல்வதில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது.
சரக்கு விநியோகத்தில் உள்ள இப்பிரச்னைகளை உடனக்குடன் அறிந்து சுலபத் தீர்வு காண, வேளாண் அமைச்சகம் 24 மணி நேர உதவி மையத்தை அமைத்துள்ளது. இதற்கு ‘அனைத்து இந்திய வேளாண் போக்குவரத்து உதவி மையம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
18001804200 மற்றும் 14488 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு வர்த்தகர்கள், லாரி ஓட்டுநர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.