டில்லி
கொரோனா பரிசோதனைகளை தினசரி 40,000 என்னும் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல், தொடர்ந்து அதிக அளவில் சோதனை , சிகிச்சை என்னும் முறைகள் கையாளப்படுகின்றன. இந்தியாவும் அதே வழியில் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவுதல் இரண்டாம் நிலையில் உள்ளது.
விரைவில் இது மூன்றாம் நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. இதைத் தடுப்பதற்காக மக்களைத் தனிமைப்படுத்த நேற்றுடன் முடிந்த தேசிய ஊரடங்கை வரும் மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஏற்கனவே பல மாநில அரசுகள் இந்த ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து இருந்தன. அத்துடன் பரிசோதனை குறித்தும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது,
மத்திய அரசு தொடர்ந்து பல பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. நேற்று வரை 244 பரிசோதனை நிலையக்க்ளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 171 அரசு நிலையங்கள் மற்றும் 73 தனியார் நிலையங்களாகும். இது குறித்து விண்ணப்பித்துள்ள பல பரிசோதனை நிலையங்கள் ஆய்வில் உள்ளன.
இதுவரை தினம் 21000 கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தினசரி 40000 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அரசுக்குப் பெரிய சவாலாக உள்ளது சோதனைக் கருவிகள் பற்றாக்குறை ஆகும். இதை வெளிநாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்ய அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
நாடெங்கும் விரைவாகச் சோதனைக் கருவிகளை அனுப்பி வைக்க 15 டிப்போக்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்தியா ரிவர்ஸ் டிரான்ஸ்மிஷன் முறையில் சார்ஸ் மற்றும் டிபி தொற்றுக்கான சோதனைக் கருவிகளை உருவாக்கி உள்ளது இந்த கருவிகளும் கொரோனா சோதனைக் கருவிகள் போன்றவை ஆகும். எனவே இதைக் கொண்டு கொரோனா சோதனைகளைச் செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.